Sunday 18 March 2018

'கேமரன் மலை' கேவியசுக்கே; வலுபெறும் ஆருடம்?

ரா.தங்கமணி

கேமரன் மலை-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்ற நிலையில் அரசியல் விவகாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.

இத்தேர்தலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட 'கேமரன் மலை' நாடாளுமன்றத் தொகுதி மைபிபிபி கட்சியின் வசமே செல்லக்கூடும் என ஆருடங்கள் வலுபெறுகின்றன.

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முதல் இத்தொகுதியில் மஇகாவே போட்டியிட்டு வந்துள்ளது. ஆதலால் இத்தொகுதி மஇகாவின் பாரம்பரியத் தொகுதி, ஆதலால் வரும் தேர்தலில் மீண்டும்  மஇகாவே போட்டியிடும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தனது வாதங்களை முன் வைத்து வந்துள்ளார்.

2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர் மஇகாவில் நடந்த கட்சித் தேர்தலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உட்பூசலாலும்  கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் அப்போதைய தேசியத் தலைவருமான டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி 'சுயேட்சை' தொகுதியாக அடையாளப்படுத்தப்பட்டது.

கடந்த் 4ஆண்டுகளுக்கும் மேலாக கேமரன் மலையில் சேவையாற்றி வரும் நான், இத்தொகுதியின் வேட்பாளராக களமிறங்கினால் நிச்சயம் தேசிய முன்னணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்ற வாதத்தை முன்வைக்கிறார் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ்.

இத்தகைய சூழலில் நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்ய நாடாளுமன்றத் தொகுதிகளை கூடுதலாக கைப்பற்ற வேண்டிய சூழலை தேசிய முன்னணி எதிர்கொண்டுள்ளது. கடந்த காலங்களில் போட்டியிட்டோம், பாரம்பரியத் தொகுதிகள் என்பதெல்லாம் இப்போது பேசி கொண்டிருக்க முடியாது. நமக்கு தேவை வெற்றி ஒன்றே. அதற்கு யார் தகுதியானவர்களோ அவர்களை களமிறக்குவதுதான் தேசிய முன்னணி இப்போதைய தேவை என அண்மையில் ஈப்போவுக்கு வந்திருந்த பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தெளிவுப்படுத்தியுள்ளார்.

பிரதமரின் இந்த கூற்றின் அடிப்படையில் 'கேமரன் மலை' கேவியசுக்கே செல்லலாம் என்ற ஆருடம் வலுபெறுகின்ற நிலையில் இன்னும் சில தினங்களில் 'கேமரன் மலை' யாருக்கு என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடலாம்.

No comments:

Post a Comment