Wednesday 21 March 2018

மலேசிய அரசியல் சூழலை உலுக்கும் 'புகைப்பட அரசியல்'- யாருக்கு வெற்றி?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் பரபரப்பு ஒருபுறம் மலேசிய அரசியலை சூடேற்றி கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது புதிய கலாச்சாரமாக 'புகைப்பட அரசியல்' மலேசிய அரசியலை உலுக்கி கொண்டிருக்கிறது.

பினாங்கு கடலடி சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பிலான  ஊழல் விசாரணை நிறுத்துவதற்கு ஒரு கொடியே 90 லட்சம் வெள்ளியை பெற்றதாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட டத்தோஶ்ரீ அந்தஸ்த்து கொண்ட ஒரு தொழிலதிபருடன் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் இருக்கும் புகைப்படங்களை சில தரப்பினர் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

லிம் குவான் எங் மீது ஊழல் கறையை பூசும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு இந்நடவடிக்கை தொடர்பில் தேமுவைச் சேர்ந்த தலைவர்களை கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள சம்பந்தப்பட்ட 'டத்தோஶ்ரீ'க்கும் முதல்வர் லிம் குவான் எங்கிற்கும் என்ன தொடர்பு? என்று அவர்களை கேள்விகளை தொடர்கின்றனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் மனைவியுடன் இருக்கும் தேமு தலைவர்கள் புகைப்படங்களை பதிலடியாக வெளியிட்டு வருகின்றார் முதல்வர் லிம் குவான் எங்.

அந்த தொழிலதிபரின் மனைவியுடன் தேமு தலைவர்கள் தொடர்பில் இருப்பது குறித்து விசாரணை நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பிய அவர், கைப்பேசியில் பாதுகாக்கப்பட வேண்டிய புகைபடங்களை யார் வெளியிட்டது? என கேள்வி எழுப்புகிறார்.

மிக கடுமையான சூழலை ஏற்படுத்தியுள்ள 14ஆவது பொதுத் தேர்தல் பினாங்கு மாநிலத்தை கைப்பற்ற முனையும் தேசிய முன்னணியும், மாநில ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பக்காத்தான் ஹராப்பானும்  'புகைப்பட அரசியல்' 'போட்டியில் களமிறங்கி முட்டி மோதிக் கொள்கின்றன.

இந்த போட்டியை வேடிக்கை பார்க்கும் மக்கள் (வாக்காளர்கள்) பினாங்கு மாநிலத்தில் யாருடைய ஆட்சியை அமர வைக்கப் போகிறார்கள் என்பது 14ஆவது பொதுத் தேர்தல் முடிவில் தெரிந்து விடும்.

No comments:

Post a Comment