Monday 19 March 2018

4 பேரின் 'சதி'யால் ஊத்தான் மெலிந்தாங் பறிபோனது - டத்தோஶ்ரீ சரவணன் தாக்கு

ரா.தங்கமணி

தாப்பா-
மஇகாவுக்கு ஒற்றுமை எவ்வளவு தேவை என்பதற்கு 'ஊத்தான் மெலிந்தாங்' சம்பவம் சிறந்த பாடமாக அமைந்துள்ளது.  4 பேரின் 'சதி'ராட்டத்தால் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி மஇகாவிடமிருந்து கைநழுவிச் சென்றுவிட்டது என இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கூறினார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக மாநில மஇகா தலைவரும் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ வ.இளங்கோ கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக களமிறங்கி சேவையாற்றியுள்ளார்.

இந்த இரண்டு ஆண்டுகளில்  டத்தோ இளங்கோவை எப்போது தொடர்பு கொண்டாலும் 'ஊத்தான் மெலிந்தாங்கில் இருக்கிறேன்... ஊத்தான் மெலிந்தாங்கில் இருக்கிறேன்' என்று மட்டுமே சொல்வார்.

இந்த காலகட்டத்தில் டத்தோ இளங்கோ சேவையாற்றிய போதிலும் அங்குள்ள சிலரின் குறைகூறல்களால் தற்போது ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி அம்னோவுக்கு கைமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. நமக்குள்ளான பிரச்சினைகளையும் சங்கடங்களையும் பிறரிடம் கூறி 'தகராறு வளர்த்துக் கொண்டதால்'  இந்த அவலநிலை ஏற்பட்டது.

அதே போன்றுதான் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியிலும்  மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு  நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

ஆனால் அவர் சரியில்லை என குறை கூறி 'மாற்றம் வேண்டும்' என்று கோஷமிட்டு அவரை கடந்த 12ஆவது பொதுத் தேர்தலில் தோற்கடித்தனர். நல்லதோ கெட்டதோ அவர் (துன்) அங்கு பதவி வகித்தபோது எதற்கெடுத்தாலும் மக்களுக்கு அள்ளி கொடுத்தார்.

ஆனால் அவரை தோற்கடித்து கடந்த இரு தவணைகளாக எவ்வித உதவியும் இல்லாமல் சுங்கை சிப்புட் மக்கள் அவதிபடுகின்றனர் என இன்று தாப்பா தொகுதி மஇகாவின் தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடும் நிகழ்வில் உரையாற்றியபோது மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான அவர் சொன்னார்.

இவ்விரு சம்பவங்களுமே நமக்கொரு படிப்பினையாகும். 'மாற்றம் வேண்டும்' என கூறுபவர்களால் எவ்வித மாற்றத்தையும் முன்னெடுக்க முடியாது. அதேபோன்று நாம் ஒற்றுமையாக இருக்கும்வரை யாரும் நம்மை பிரித்தாள முடியாது என்பதை இங்குள்ள வாக்காளர்கள் உணர வேண்டும்.

மக்களுக்கு தேவையான சேவைகளை செய்து வருவதாலே தாப்பா நாடாளுமன்றத் தொகுதி பலமானதாகவும் வெற்றி வாய்ப்புள்ளதாகவும் திகழ்கிறது. இதனை நாம் ஒருபோதும் கெடுத்து கொள்ளக்கூடாது.

இங்குள்ள இந்தியர்களிடையே காணப்படும் ஒற்றுமை எந்நாளும் தொடரபட
வேண்டும் என வலியுறுத்திய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன், அதுதான் நம்முடைய பலமும் பாதுகாப்பும் ஆகும் என கூறினார்.

இந்நிகழ்வில் தாப்பா தொகுதி தேமு தலைவர் டத்தோ சம்சுல்,டத்தோ இளங்கோ, தாப்பா தொகுதி மஇகா தலைவர் டத்தோ மு.மாலசிங்கம் உட்பட மஇகா பொறுப்பாளர்களும் கட்சி உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment