Friday 30 March 2018
தேர்தல் முடிவுக்கு பின்னரே மக்களின் விருப்பத்தை அறிய முடியும்- மணிமாறன்
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
மக்கள் விரும்பும் வேட்பாளர் யார் என்பது தேர்தல் முடிவு தெரிந்த பின்னரே அறிய முடியும். தேர்தலில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படாத வரை மக்கள் யாரை விரும்புகின்றனர் என்பதை யாராலும் கணிக்க முடியாது என சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன் குறிப்பிட்டார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் வேட்பாளர் குறித்த ஆருடங்கள் இன்னும் வலுபெற்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் 'மக்கள் விரும்புபவரே வேட்பாளராக களமிறக்கப்படுவர், கட்சி அடிப்படையில் அல்ல' என பேராக் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் கூறியுள்ளதாக தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள செய்தி குறித்து கருத்துரைத்த மணிமாறன், மக்கள் விரும்பும் வேட்பாளர் யார்? என்பதை யாராலும் கணிக்க முடியாது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னரே களமிறக்கப்படும் வேட்பாளர் மக்களின் விருப்பத்திற்குரியவரா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அதை விடுத்து வீணான கருத்துகள் பகிரப்படுவது தேமுவின் பலவீனத்தை காட்டும் என சுட்டிக் காட்டிய அவர், மக்கள் விரும்புபவர்களுக்கே முன்னுரிமை என்றால் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின் போது 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளை பக்காத்தான் கூட்டணி கொண்டிருந்தது. ஆனால், எண்ணிக்கை அடிப்படையில் அதிகமான 'நாற்காலி'களை கொண்டிருந்ததால் மத்திய அரசாங்கம் அமைக்கும் ஆட்சி அதிகாரத்தை தேசிய முன்னணி பெற்றது.
மேலும், கட்சியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுமானால் நாட்டின் அரசியல் கட்சிகளே தேவையில்லாத சூழல் ஏற்பட்டு விடலாம்.
14ஆவது பொதுத் தேர்தலுக்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்பதால் வீணான, தேவையற்ற அறிக்கைகள் மக்களை குழப்பி, கட்சி உறுப்பினர்களையும் பலவீனமாக்கி தேர்தலில் தோல்வியை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என மணிமாறன் மேலும் கேட்டுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment