Monday 5 March 2018

மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாத பேராக் மாநில அரசு- மக்கள் நடுவர் மன்றம்


ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பேராக் மாநிலத்தில் நிலவும் மக்களின் பிரச்சினைகளை கண்டுக் கொள்ளாமல் முதலாளித்துவத்தின் மேம்பாட்டின்  மீது அக்கறை கொண்டதாக தற்போதைய பேராக் மாநில அரசு திகழ்வதாக 'மக்கள் நடுவர் மன்றம்' கூறியுள்ளது.

விவசாயிகள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சினைகளுக்கும் 'நகர முன்னோடிகள்' எனப்படும் புறம்போக்கு வாழ் மக்களின் நிலப் பிரச்சினைக்கும் தீர்வு காணாமல் மெத்தனப் போக்கில் மாநில அரசு செயல்படுகிறது என சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு அளப்பரியதாக திகழ்கிறது. ஆனால் இங்கு அரசாங்க நிலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மக்களிடமிருந்து நிலங்கள் மீட்கப்பட்டு ஜிஎல்சி நிறுவனங்களிடமும் மேம்பாட்டு நிறுவனங்களிடமும் விற்கப்படுகின்றன.

இத்தகைய நடவடிக்கையால் சொத்துடைமை திட்டங்கள் மேற்கொள்ளப்படுமே தவிர விவசாய நடவடிக்கைகள் முற்றாக அழிக்கப்படுகின்றன.

முதலாளித்துவத்தின் நடவடிக்கைகளுக்கு துணை போவதால்தான் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அலட்சியம் காட்டப்படுவது தொடர்கிறது.

மாநில அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் மக்களை மறந்து விட்டு முதலாளித்துவத்திற்கு துணை போகும் அதிகாரம் மிக்கவர்களை மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே 'மக்கள் நடுவர் மன்றம்' அமைக்கப்பட்டு மந்திரி பெசாரின்  நேரடி பார்வையில் மக்கள் பிரச்சினைகளை முன்வைக்க ஏற்பாடு செய்தோம்.

ஆனால் இந்த மக்கள் மன்றத்திற்கு மந்திரி பெசாருக்கு அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை என டாக்டர் ஜெயகுமார் கூறினார்.

நேற்று நடைபெற்ற மக்கள் நடுவர் மன்றத்தின் நடுவர்களாக டத்தோ டாக்டர் டெனிசன் ஜெயசூர்யா, டாக்டர் லிம்மா ஹூய், டாக்டர் ரொஹானா அரிப்பின், முகமட் சஹானி அப்துல்லா, மீனாட்சி ராமன் ஆகியோர் செயல்பட்டனர்.

இந்நிகழ்வில் பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் சரஸ்வதி, பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்த அருட்செல்வன், பவாணி, அகஸ்டின், சுகுமாறன்,  பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment