Sunday 18 March 2018

சுங்கை சிப்புட்டில் தேமுவின் வெற்றி வேட்பாளருக்கானது அல்ல; மக்களுக்கானது- இளங்கோவன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்- 
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீட்டெடுக்க வேண்டும் என கூறுவது வேட்பாளரின் வெற்றிக்காக அல்ல; மாறாக அது மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக என்று சுங்கை சிப்புட் மஇகா தலைவர்  எம்.இளங்கோவன் வலியுறுத்தினார்.

கடந்த இரு தவணைகளாக சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து கிடப்பதால் இந்த தொகுதி மக்களின் வாழ்வாதாரச் சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரால் தீர்வு காண முடியாத நிலையில் தேசிய முன்னணி, மஇகாவின் உதவியையே பெரும்பாலானோர் நாடி வருகின்றனர்.

ஆனால் ஆட்சி அதிகாரம் நம்மிடம் இல்லாததால் மக்களின் பிரச்சினைகளை முழுவதுமாக தீர்க்க முடியவில்லை. முடிந்தளவு உதவிகள் வழங்கப்பட்டு வந்தாலும் அது நிரந்தர தீர்வாகாது.

வரும் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேமு மீட்டெடுக்க வேண்டும். அதுதான் இங்குள்ள மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு ஆகும்.  

இங்கு தேமு சார்பில் யார் வேட்பாளராக களமிறங்கினாலும் அவரின் வெற்றி நாம் பாடுபட வேண்டும். இங்கு பெறும் வெற்றி வேட்பாளருக்கான வெற்றியல்ல; மாறாக மக்கள் பிரச்சினைகளின் தீர்வுக்கான வெற்றியாகும் என்பதை உணர்ந்து வாக்காளர்கள் துரிதமாக செயல்பட வேண்டும் என 
கம்போங் இராமசாயில் நடைபெற்ற பிளாங் தேர்தல் நடவடிக்கை மையத்தின் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் இளங்கோவன் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட்  மஇகா ஒருங்கிணைப்பாளர் டத்தோ 
சோதிநாதன், ஜாலோங் தொகுதி கெராக்கான் ஒருங்கிணைப்பாளர் டத்தோ டான் லியான் ஹோ,  சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன், பிளாங் தேர்தல் நடவடிக்கை மைய தலைவர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment