Tuesday 22 August 2017

'துர்நாற்றம், இரைச்சல்: தீர்வு எப்போது?' நரக வாழ்க்கையில் மக்கள்


(புனிதா சுகுமாறன்)
ஈப்போ-
இங்குள்ள பெர்ச்சாம் இடாமான் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தாலும் அங்கிருந்து வெளிபடும் அதிக சத்தத்தாலும் இங்கு வசிக்கும் மக்கள் தினமும் பெரும் வேதனையில் மூழ்கியிருப்பதோடு சுகாதாரப் பிரச்சினையால் சிறுவர்களும் முதியோரும் அவதிப்படுகின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதோடு அதனை இயந்திரம் மூலம் அரைக்கும் நடவடிக்கையும் இந்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படுவதால் துர்நாற்றமும் அதிக இரைச்சலும் உண்டாவதாக இப்பகுதி வாழ் மக்கள் முறையிட்டனர்.
இப்பிரச்சினை தொடர்பில் ஈப்போ மாநகர் மன்றத்திடம் புகார் செய்தும் எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும்  மேற்கொள்ளப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என அவர்கள் குறிப்பிட்டனர்.
விஜய்

கடந்த 5 ஆண்டுகாலமாக இந்த தொழிற்சாலையிலிருந்து வரும் துர்நாற்றம், இரைச்சலுக்கிடையே எங்களது குடும்ப வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. வாசல் கதவை அடைத்தே வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் அடிக்கடி நோய்களுக்கு ஆளாகின்றனர்.

பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் அடிக்கடி நோய்களுக்கு ஆளாகின்றனர்.
கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டில் நிம்மதியாக குடியிருக்க முடியவில்லை. இவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் குடியிருப்பாளர்களில் ஒருவரான விஜய் கேட்டுக் கொண்டார்.
       சுப்பிரமணியம்

இன்னும் எத்தனை காலத்திற்குதான் இந்த துர்நாற்ற வேதனையுடன் வாழ்வது என கேட்கிறார் 60 வயதான சுப்பிரமணியம். தனது பேரப்பிள்ளைகள் இங்குள்ள திடலில் விளையாட செல்லும் முன்பே துர்நாற்ற அவஸ்தைக்கு ஆளாகின்றனர். வயதான நாங்கள் நிம்மதியாக உறங்கி 6 வருடங்கள் ஆகிவிட்டன என்கிறார்.
கேரி

மாநகர் மன்றத்தினர் ஆண்டுதோறும் பணத்தை வாங்குவதிலேயே குறியாக உள்ளனர். ஆனால் இந்த தொழிற்சாலை தொடர்பில் பலமுறை புகார் தெரிவித்தும் ஈப்போ மாநகர் மன்றத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
துர்நாற்றத்தாலும் அதிகமான இரைச்சலாலும் எனது பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர் என கேரி (வயது 42) கூறினார்.
திருமதி கஸ்தூரி

சேமித்த பணத்தில் இங்கு வீடு வாங்கி குடியேறினோம். குடிவந்த நாளிலிருந்து இதுவரை நிம்மதியாக உறங்க முடியவில்லை. மாலை நேரத்தில் விளையாட போகும் முன்னே துர்நாற்றம் வீசுகிறது என பிள்ளைகள் புலம்புகின்றனர். இந்த தொழிற்சாலை மீது சுற்றுசூழல் அமைச்சு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமதி கஸ்தூரி தெரிவித்தார்.
முருகேசன் 

பொழுது விடியும் முன்னே தொழிற்சாலையிலிருந்து வீசும் துர்நாற்றம், அதிக இரைச்சல் இரவு நேரம் வரையிலும் தொடர்கிறது. இதனால் சுத்தமான காற்றை கூட சுவாசிக்க முடியாமல்ல அவதிபடுகிறோம் என்கிறார் முருகேசன் (வயது 70).

மேலும் இங்குள்ள  குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை நரகமாக்கியுள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சீன குடியிருப்பாளர்களாக லீ தாக் மிங் (வயது58), ஜிம்மி (வயது 45), அன்சான் சியோங் (வயது 21), கூன்  ஆகியோர் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment