Friday 11 August 2017

தலைவர் தண்டிக்கப்பட்டிருக்கலாம்; வஞ்சிக்கப்பட்டது மக்களே !



2007ஆம் ஆண்டு ஏற்பட்ட எழுச்சி போராட்டம், மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தி அலை ஆகியவற்றாலேயே 2008ஆம் ஆண்டு சுங்கை சிப்புட் வேட்பாளராக களமிறங்கிய டத்தோஶ்ரீ உத்தாமா ச.சாமிவேலு தோற்கடிக்கப்பட்டார்இத்தேர்தலில் சாமிவேலு தண்டிக்கப்பட்டார் என பலர் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மையிலேயே வஞ்சிக்கப்பட்டது இங்குள்ள மக்கள்தான். குறிப்பாக இந்தியர்கள் தான் என தனது 'அரசியல் ஆதங்கத்தை' வெளிப்படையாக எடுத்துரைக்கிறார்  சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன்.

'ஹை-டீ வித் லீடர்ஸ்' அங்கத்தில் அவருடன் நடத்தப்பட்ட சிறு உரையாடலின் தொகுப்பு இங்கே:

கே: மஇகாவில் உங்களது தொடக்கமும் வளர்ச்சியும்?

 மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி என போற்றப்படும் மஇகாவே முந்தைய காலகட்டங்களில் பிரதான கட்சியாக இருந்தது. பள்ளி பயிலும் வயதில் தோட்டப்புறங்கள் தோறும் மஇகாவே வேரூன்றி கிடந்த 80ஆம் ஆண்டு காலகட்டங்களில் தந்தை, உறவினர்கள், சுற்றுத்தார் என அனைவருமே மஇகாவில் சேவையாற்றிய அங்கமே என்னையும் மஇகாவில் இணைத்தது. கல்வி படிப்புக்கு பின்னர் மஇகாவின்  ஓர்  உறுப்பினராக இணைந்து கிளை இளைஞர் பிரிவுத் தலைவர், தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவர், கிளைத் தலைவர், தொகுதி செயலாளர் என 20 ஆண்டுகால அரசியல் பயணம் தொடர்கின்றது.

கே: கடந்த பொதுத் தேர்தல்களில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியிலேயே மஇகா தோல்வி கண்டதே?

 :  2008, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மஇகா தோல்வி கண்டதற்கு  பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தேசிய அரசியல் நெருக்கடி, ஆளும் அரசாங்கத்தின் மீதான வெறுப்புணர்வு, தனி மனித  தாக்குதல் போன்ற காரணங்களே இத்தேர்தல்களில் மஇகா தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் ஆகும்.

கே: மஇகா பிரதிநிதித்துவத்திற்கும் எதிர்க்கட்சி பிரதிநிதித்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகள்?

: 2008க்கு முன்பு வரை இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்த மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ச.சாமிவேலு மத்திய அரசாங்கத்தில் முழு அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இத்தொகுதிக்கான மானியம் மட்டுமின்றி தனது அமைச்சரை நிதியையும் கொண்டு பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்ஆனால் 2008க்கு பின்னர் இத்தொகுதி எதிர்க்கட்சி வசமானது எத்தகைய மானியமும்  மேம்பாட்டுத் திட்டங்களும் இன்றி மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அரசியல் சூழ்ச்சியின் காரணமாக டத்தோஶ்ரீ சாமிவேலுவை தண்டித்தோம் என பெரும்பாலானவர்கள் மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மானியங்கள், உதவித் திட்டங்கள் ஏதும் இல்லாமல் மக்கள்தான்  தண்டிக்கப்பட்டு வருகின்றனர். இதுவும் வஞ்சிக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சிதான். (டத்தோஶ்ரீ சாமிவேலு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தாலும் இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு கட்டமைப்பு தூதராக பணியாற்றி வருகின்றார்.)



கே: 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி/ மஇகா மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதா?

: அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. எதிர்க்கட்சியின் ஆட்சியில் மக்கள் அடைந்துள்ள பல்வேறு பலவீனங்களே தங்களது வாக்குகளை தேசிய முன்னணிக்கு விழ வைக்கும்இன்னொருமுறை தங்களை தண்டித்துக் கொள்ளும் தவற்றை இந்திய வாக்காளர்கள் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கேஇத்தொகுதியில் 'மண்ணின் மைந்தர்' கோரிக்கை வலுபெறுகிறதே?, வேட்பாளர் பட்டியலில் உங்கள் பெயரும் கிசுகிசுக்கப்படுகிறதே?

 : வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பலர் களமிறங்க தயாராக உள்ளனர். ஆனால் இது மஇகா தொகுதி; மஇகாவைச் சேர்ந்தவர்தான் களமிறங்குவார் என்பதை உணராமல் ஆர்வத்தில் சிலர் முன்வருகின்றனர், பலர் தூண்டி விடப்படுகின்றனர்.

வேட்பாளராக களமிறங்குவதற்கு நானும் எனது சுயவிவரத்தை மஇகா தேசியத் தலைவரிடம் ஒப்படைத்துள்ளேன். பொதுத் தேர்தலில் மஇகா தேசியத் தலைவரும் தேசிய முன்னணி தலைவரும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வர். யார் வேட்பாளராக வந்தாலும் தேசிய முன்னணியி வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றதான் போகிறோம்.




கே: சுங்கை சிப்புட்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் என்ன?

: பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே இங்குள்ள மக்களின் நிலை மாற்றியமைக்கப்படும். பெரு நிறுவன தொழிற்சாலைகள், உள்நாட்டு- அனைத்துலக கல்லூரி,பல்கலைக்கழகங்கள், தேசிய நிலையிலான வர்த்தக மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவையே இங்குள்ள மக்களுக்கு முக்கியம்.

தனிமனித மேம்பாட்டுக்கும் சுயநல வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுப்பதை விட இதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரமே மாற்றியமையக்கூடிய சூழல் அமையும். உண்மையிலேயே இங்குள்ள மக்களுக்கு இதுதான் தேவைஇதுதான் அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்யும்.

-முற்றும்-

No comments:

Post a Comment