Sunday 13 August 2017

'ஏமாற்றம்; பெருநஷ்டம்' 8 வருட போராட்டத்தில் 'கண்ணீர் துளி'யே மிச்சம்(ரா.தங்கமணி)

கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் எடுக்கும் எந்தவொரு முடிவும் அந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் சந்தோஷத்தையும் நிர்மூலமாக்கி விடும்.

இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்கள் காட்டப்பட்டாலும் நாட்டையே உலுக்கும் அளவுக்கு பூதாகரமாக வெடித்தது திருமதி இந்திரா காந்தியின் வாழ்க்கை சூழல்.

'மதமாற்றம்'...  இந்த ஒற்றை வார்த்தைக்குள் தனது வாழ்க்கையை இழந்திருப்பது மட்டுமல்லாது பெற்ற பிள்ளையைகூட காண முடியாத பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றார் முன்னாள் பாலர்பள்ளி ஆசிரியரான திருமதி இந்திரா காந்தி.

கணவரின் மதமாற்றம், 9 மாத கைக்குழந்தையை பறிகொடுத்தது, உரிமை போராட்டம், நீதிமன்ற நடவடிக்கை, நீதிமன்றம்- போலீசாரின்  அலைகழிப்பு, ஆளும் அரசாங்கத்தின்  தலையீடு, ஒருதலைபட்ச மதமாற்றத்திற்கு தீர்வு காணும் வகையில் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல், சட்ட மசோதாவை மீட்டுக் கொள்ளுதல் என பல்வேறு அரங்கேற்ற  காட்சிகளே இவரது விவகாரத்தில் நீண்டு கொண்டிருக்கிறது.

இவ்வேளையில் அவருடன் நடத்தப்பட்ட சிறு நேர்காணலை இங்கே தொகுக்கின்றோம்:

கே: மதமாற்ற விவகாரத்தை கடந்த 8 ஆண்டுகளாக எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

ப: மதமாற்றம் விவகாரத்தில் நான் மட்டுமே பாதிக்கப்படவில்லை. மாறாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவ்விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்கின்ற மனநிலையில் யாருமே இல்லை என்பதுதான் உண்மை.
மதமாற்றம் செய்துக் கொண்ட முன்னாள் கணவரிடம் உள்ள எனது குழந்தை மீட்பதற்காகவே சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறேன். ஆனால் இதில் எதிர்நோக்குகின்ற பின்னடைவுகள்தான் என்னை பெரும் துயரத்தில் மூழ்கடிக்கின்றன.

கே: அபகரித்துச் செல்லப்பட்ட பிள்ளையின் தற்போதைய நிலையை உணர்ந்துள்ளீர்களா?

ப: கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அபகரித்துச் செல்லப்பட்ட எனது மூன்றாவது மகளின் நிலை என்னவென்பதை இன்றுவரை அறியமுடியவில்லை. 9 மாத கைக்குழந்தையாக இருந்தபோது அவள் என்னிடமிருந்து அபகரித்துச் செல்லப்பட்டாள். 8 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் அவளின் முகத்தைக்கூட பார்த்திராத துர்பாக்கிய நிலையை எதிர்கொண்டுள்ளேன். என் மகள் எனதருகே நடந்து சென்றால் கூட அடையாளம் கண்டுக் கொள்ள முடியாத இக்கட்டான சூழலில் உள்ளேன். இந்த 8 வருடப் போராட்டத்தில் 'கண்ணீர் துளி' மட்டுமே மிஞ்சியுள்ளது.


கே: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட திருமண, விவாகரத்து சட்ட மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டது பற்றி?

ப: மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த திருமண, விவாகரத்து சட்ட மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 88ஏ சட்டப்பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ள இந்த சட்ட மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டது மதமாற்ற விவாகரத்துக்கு தீர்வுக் காண முடியாத அபாயகர சூழலையே உருவாக்கியுள்ளது.
(பகுதி  88ஏ  கூறுவது:  திருமணம்  புரிந்துகொண்ட   இருவரில்   ஒருவர்  இஸ்லாத்துக்கு   மாறினால்,  அவர்களுக்குப்  பிறந்த  குழந்தை    மதமாற்றத்துக்கு  முன்னர்     எந்த  மதத்தைச்  சார்ந்தவர்களாக   இருந்தார்களோ   அதே  மதத்தைச்     சார்ந்துதான்   இருக்க முடியும். இருவரின்  விருப்பத்தின்பேரில்தான்    அதை  மதமாற்றம்    செய்ய  முடியும்.  பிள்ளைக்கு  18 வயதென்றால்    அதன்  விருப்பத்துக்கும்   மதிப்பளிக்க    வேண்டும்).

கே: மீட்டுக் கொள்ளப்பட்ட சட்ட மசோதாவுக்கு பதிலாக புதிய சட்ட மசோதா தாக்கல் நிறைவேற்றப்பட்டுள்ளதே? 

ப: மதமாற்ற விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் 88ஏ சட்டப்பிரிவு திருத்தம் செய்யப்படுவதே ஒரே வழியாகும். அதனை தவிர்த்து விட்டு புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது. இங்கு தேவை பிரச்சினைக்கான தீர்வுதானே தவிர  அதனை மேலும் சிக்கலாக்குவது அல்ல.

கே: உங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

ப: எனது அடுத்த நடவடிக்கை தொடர்பில் வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து வருகிறேன். ஆயினும் எனது மகளை மீட்டெடுக்கும் உரிமை போராட்டத்தில்  பின்வாங்கி விடமாட்டேன்.


கே: இறுதியாக, சமுதாயத்தின் மத்தியில் உங்களின் எதிர்பார்ப்பு?

ப: மதமாற்றத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் என்னை போல் யாரும் சட்டப் போராட்டத்தை நடத்தியதில்லை. இந்த விவகாரம் எழும்போதெல்லாம் ஒரு பரபரப்பான செய்தியாக மட்டுமே பலர் எண்ணுகின்றனர். ஆனால் நமது சமுதாயத்தை சூழ்ந்திருக்கின்ற அபாயமாக யாரும் கருதவில்லை.
மதமாற்றம் நமது சமுதாயத்தின் பிணி என அனைவரும் கருதி அதற்கெதிராக பொங்கி எழும்வரையிலும் இதற்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை. முதலில் சமுதாயம் விழிப்புநிலை அடைய வேண்டும். அப்போதுதான் அதற்கான போராட்டத்தில் வெற்றியை நிலைநாட்ட முடியும்.

No comments:

Post a Comment