Wednesday 23 August 2017

சிகிச்சை பலனின்றி டத்தோ ஹாஜி தஸ்லீம் காலமானார்


ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 'சமுதாயச் சுடர்' டத்தோ ஹாஜி தஸ்லீம் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

தமிழ்ப்பள்ளிகள், மக்கள் சேவை என பல சமூகச் சேவைகளை மேற்கொண்டு வந்த டத்தோ ஹாஜி தஸ்லீம் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் டாமான்சாரா கேபிஜே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

காலை முதல் மிக மோசமான நிலையில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆயினும் சிகிச்சை பலனளிக்காமல் இரவு 10.00 மணியளவில் அவர் காலமானார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'இண்டர்லோக்' நாவலை  இடைநிலைப்பள்ளிகளிலிருந்து மீட்டுக் கொள்ளும் வரை துணிச்சலாக குரல் கொடுத்தவர் டத்தோ ஹாஜி தஸ்லீம்.

தமிழ் மொழிக்கும்  தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஏதேனும் பிரச்சினை என்றால் தயங்காமல் குரல் கொடுப்பதோடு போராட்டத்திலும் பங்கெடுத்து வந்தார். மேலும் ஈப்போவிலுள்ள மெங்கிளம்பு தமிழ்ப்பள்ளியை தத்தெடுத்து அங்குள்ள மாணவர்களுக்கு வேண்டிய பல்வேறு உதவிகளை முன் நின்று செய்து வந்தார்.

அன்னாரின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என சமுதாயத் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் தங்களின் அனுதாபத்தை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வேளையில் அன்னாரை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் 'பாரதம்' மின்னியல் ஊடகம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment