Friday 25 August 2017

சுங்கை சிப்புட்டில் 60ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரா.தங்கமணி
நாட்டின் 60ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மெர்டேக்கா கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுங்கை குருடா இளைஞர் இயக்கம் ஏற்பாட்டில் சுங்கை சிப்புட் மாவட்ட இளைஞர் மன்றம், சுங்கை சிப்புட் மஇகா கிளைகள், சுங்கை சிப்புட் தமிழ் மணிமன்றம் ஆகியவற்றின் இணை ஆதரவில் நாளை 26ஆம் தேதி சனிக்கிழமை சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

காலை 9.00 மணிமுதல் 1.00 மணி வரை சுங்கை சிப்புட் தேசிய முன்னணி அலுவலகத்தில் மருத்துவப் பரிசோதனை, ரத்ததான முகாம், பல் பரிசோதனை, மார்பக பரிசோதனை,  பள்ளி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி, மரக்கன்றுகள் நடவு செய்தல், வாக்காளர் பதிவு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிகழ்வை இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார் என நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

அதோடு இரவு 7.00 மணிக்கு மேல் இங்குள்ள கோலகங்சார் மாநகர் மன்ற மண்டபத்தில் சுதந்திர தின கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சில முக்கிய பிரமுகர்களுக்கு 'சுதந்திர திலகம்' (Tokoh Merdeka) விருது வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளனர்.

இந்நிகழ்வுக்கு இந்தியா, தெற்காசிய சிறப்பு கட்டமைப்பு தூதர் டத்தோஶ்ரீ உத்தாமா எஸ்.சாமிவேலு, லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, ஜாலோங் தொகுதி கெராக்கான் ஒருங்கிணைப்பாளர் டத்தோ டான் லியான் ஹோ உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட வேண்டும் எனவும் இவ்வட்டார மக்களிடையே சுதந்திர பற்றை மேலோங்கச் செய்ய வேண்டும் எனும் ரீதியிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் வட்டார பொது மக்கள்  இந்நிகழ்வில் திரளாக கலந்து கொள்ளுமாறு மணிமாறன் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வு குறித்த காணொளி கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment