Thursday 24 August 2017

ஆயிரக்கணக்கானோரின் இறுதி அஞ்சலியுடன் விடைபெற்றார் டத்தோ ஹாஜி தஸ்லீம்


ரா.தங்கமணி
கோலாலம்பூர்- 

தமிழ்ப் பற்றாளர் 'சமுதாயச் சுடர்' டத்தோ ஹாஜி தஸ்லீமின் (வயது 68)நல்லுடல் பொது மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் புக்கிட் கியாரா முஸ்லிம் மயானக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாடறிந்த தமிழ்ப் பற்றாளரும் சமுதாய போராட்டவாதியுமான டத்தோ ஹாஜி தஸ்லீம் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக டாமன்சாரா கேபிஜே நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  நேற்று காலை அவரது உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வந்தனர். ஆயினும் சிகிச்சை பலனளிக்காமல் இரவு 10.00 மணியளவில் அவர் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது.
அன்னாரின் நல்லுடல் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள பள்ளிவாசலில் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 1.20 மணிவரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்ப்பள்ளிகளுக்கும், தமிழ்மொழிக்கும் பெரும் பங்காற்றி வந்த டத்தோ ஹாஜி தஸ்லீமின் மரணம் அனைவரிடத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அன்னாரின் நல்லுடக்கு  குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொது இயக்கங்களின் பிரதிநிதிகளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பொது மக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இறுதி அஞ்சலிக்கு பின்னர் புக்கிட் கியாரா முஸ்லீம் மயானக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

டத்தோஶ்ரீ  சுப்ரமணியம் அனுதாபம்

இதனிடையே, 'சமுதாயச் சுடர்' டத்தோ ஹாஜி தஸ்லீம் மரணம் குறித்து மஇகாவின் தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

"எனது நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த டத்தோ ஹாஜி தஸ்லீம்  அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு நான் அதிர்ச்சியும், மிகுந்த துயரமும் அடைந்தேன். இந்தியர்களின் உரிமைகளுக்காக எப்போதும் அஞ்சாமல் முன்னின்று போராடியவர் அவர்”.

“கடந்த பல வருடங்களில் அவருடன் பல விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்கவும், கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ‘பிறப்பால் நான் தமிழன், மதத்தால் நான் ஒரு முஸ்லீம்’ என்ற அவரது நிலைப்பாடும் – தமிழ் மொழிக்காகவும், தமிழர் நலனுக்காகவும், அயராது அவர் தொடர்ந்து நடத்திய போராட்டங்களும் என்றும் நமது நினைவுகளில் நீங்காமல் நிறைந்திருக்கும்”.

"அன்னாரை பிரிந்து துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment