Thursday 31 August 2017

கோலாகலமாக நடந்தேறியது 60ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம்

கோலாலம்பூர்-
'என் நாடு ஒரே உள்ளம் ஒரே உணர்வு' எனும்  கருப்பொருளோடு டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர  தினக் கொண்டாட்டத்தை பல்லாயிரக்கணக்கான மக்களும் சுற்றுலா பயணிகளும் கண்டு களித்தனர்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் வி முன்னிலையில்  பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி உட்பட அமைச்சர்களின் பங்கேற்ற சுதந்திர தின  விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக 1957ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்தபோது முதன் முதலாக தேசியக் கொடியை ஏற்றிய அரச மலேசிய கடற்படையின் முன்னாள் படையினர் லெப்டனன்ட் கமாண்டர்  முகமட் ஷாரீஃப் கலாம், கமாண்டர் ஓலிவர் கல்வெட்ர சாமுவேல் ஆகியோர் தேசியக் கொடிகள்  ஏந்தி வர தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.
நாட்டின் முக்கிய துறைகள், அடையாள அணிவகுப்புகள் மக்களின் வெகுவாக கவர்ந்திழுத்தன. நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த தேசிய அணிவகுப்பில் மாணவர்கள், பலதுறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், 2017 சீ போட்டி விளையாட்டாளர்கள், பாதுகாப்புப் படையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

1957ஆம் ஆண்டு நாடு சுதந்திமடைந்தபோது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் போராட்டங்களும் நாடகமாக அரங்கேற்றப்பட்டது.

நாட்டின் 60ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் துங்கு அப்துல் ரஹ்மான், துன் வீ.தி.சம்பந்தன், துன் ஜுங்கா அனாக் பெரிங், துன் டத்து முஸ்தாபா டத்து ஹரூண் ஆகிய தலைவர்களின் வாரிசுகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தங்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்திக் கொண்டும் தலையில்  மெர்டேக்கா வாசகங்கள் அடங்கிய மஞ்சள் வண்ண துணியை அணிந்து கொண்டு தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.

No comments:

Post a Comment