Tuesday 9 May 2017

ஒரே தொகுதியில் மட்டும்தான் உங்களுக்கு செல்வாக்கா?


மலேசியாவை பொறுத்தவரை 222 நாடாளுமன்றத் தொகுதிகளும் 576 சட்டமன்றத் தொகுதிகளும் இருக்கின்றன. இதில் தேசிய முன்னணியின் இந்திய பங்காளி கட்சிகளின் தலைவர்களும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் கேமரன் மலையை மட்டும் குறிவைத்துஎனக்குத்தான் அங்கு சீட்என மாறி மாறி அறிக்கை விடுவது மட்டுமின்றி பல கட்சி நிகழ்ச்சிகளையும் கேமரன் மலையில் போட்டி போட்டு நடத்தி வருகின்றனர்.

இவ்வளவு காலம் மக்களுடன் ஒன்று கூடாத தலைவர்களெல்லாம் இப்போது மக்களுடன் ஒன்றுகூடும் நிகழ்ச்சி நடத்தி, “நாங்கள் காணாமல் போகவில்லை, இங்கேதான் இருக்கிறோம்என்று ஞாபகமூட்டுகிறார்கள்.
கலர் கலராய் பல கட்சி கொடிகள் கேமரன் மலையில் பறக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், மாறி மாறி பிரச்சார போட்டி நிலவுவது தேசிய முன்னணிக்கும் எதிர்க்கட்சிக்கும் கிடையாது. மாறாக தேசிய முன்னணி எனும் கூட்டமைப்பு கட்சியில்ஒரு குடையின் கீழ் செயல்படுகிறோம்என்று மார்தட்டி கொள்ளும் இந்திய பங்காளி கட்சிகளுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும்தான் இந்த போட்டி நிலவுகிறது.

ஒரு கட்சியின் கீழ் ஒன்றுபட்டு செயல்பட முடியாத நம் தலைவர்கள் மேடையில் மட்டும் சமுதாயம் பிளவுப்படக்கூடாது, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வியாக்கியானம் பேசுகிறார்கள். இதில் வேடிக்கையானது நமக்குள் நாமே சண்டையிட்டு கொள்வதுதான். இதை மற்ற சமூகத்தினர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை தலைவர்கள் உணர வேண்டும்.

இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ஒவ்வொரு கட்சியும் தேசிய ரீதியில் லட்சக்கணக்கில் உறுப்பினர்களை வைத்துள்ளதாக கணக்கு காட்டுகிறார்கள். ஆனால் பொதுத் தேர்தல் என்று வரும்போது அந்த குறிப்பிட்ட ஒரு தொகுதியில் மட்டும் உங்கள் செல்வாக்கா? ஏன் மற்ற தொகுதிகளை குறிவைக்கவில்லை? நாடாளுமன்றத்தில் பல இந்தியர்கள் இருப்பது மகிழ்ச்சிதானே? ஆனால் இப்படி அனைத்து இந்திய தலைவர்களும் ஒரே தொகுதியை குறைவைத்து நடவடிக்கையில் ஈடுபடுவதன் ரகசியமென்ன? அப்படி அந்த தொகுதியில் உங்கள் செல்வாக்கு என்ன? பணமா? அல்லது உங்களின் வெற்று வாக்குறுதியை கேமரன் மலை மக்கள் எளிதில் நம்பி விடுவார்களா?

கேமரன் மலை மக்கள் தெளிவானவர்கள் என்பதையும் நமது அரசியல் தலைவர்கள் இன்னமும் உணராமல் பழங்காலத்து அரசியல் யுக்தியை பயன்படுத்துவது வேடிக்கையின் உச்சம் ஆகும். மக்கள் மனதில் நீங்கள் இடம்பிடித்திருந்தால்  222 நாடாளுமன்றத் தொகுதியிலும் சரி; 576 சட்டமன்றத் தொகுதியிலும் சரி, எங்கு சீட் கிடைத்தாலும் போட்டி போட்டு வெல்லக்கூடிய சக்தி உங்களுக்கு கிடைக்கும். மீண்டும் மீண்டும் நமக்குள் நாமே சண்டையிட்டுக் கொள்ளும் நமது அரசியல் தலைவர்கள் இந்த நூற்றாண்டிலும் குறுகிய வட்டத்தில் செயல்படுகிறார்கள் என்பதை நிரூபிக்கிறார்கள், இப்படியே போட்டி போட்டு கொண்டு அந்த தொகுதியை மற்ற சமூக கட்சிக்கு தாரை வார்த்து தர போகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கிறோம் என்று கூறும் தலைவர்களே…… உங்கள் சண்டையில் இந்திய சமுதாயத்தின் பெயரை கலங்கப்படுத்தி விடாதீர்கள். மற்ற சமூகத்தினட் சிரிக்கும் அளவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விடாதீர்கள்

எழுத்து : வெற்றி விக்டர்


No comments:

Post a Comment