Sunday 4 March 2018

எனக்கான தொகுதியில் பிரதமரின் 'ஆசி'யுடனே 'வேட்பாளராக' என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன் - டான்ஶ்ரீ கேவியஸ் - பகுதி -1


நேர்காணல்: ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

கேமரன் மலை-

மலேசியாவின் 'குளுகுளு'வென சில்லென்ற காற்றை வீசி, கண்களுக்கு பசுமையை மட்டுமே  விருந்தாக்கி கொண்டிருந்த கேமரன் மலை, அண்மைய காலமாக 'அரசியல்' ஆட்டத்தால் சூடாகிக் கொண்டே போகிறது எனலாம்.

பசுமையையும் குளிரையும் தன்னகத்தே கொண்டிருந்த கேமரன் மலை, சில காலம் பல்வேறு இயற்கை பேரிடர் சம்பவங்களை எதிர்கொண்ட வேளையில் தற்போது 'அரசியல்' ஆட்டத்தையும் வேடிக்கை பார்க்க வைத்துள்ளது.

'கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் நானே போட்டியிடுவேன்' என்ற முழக்கத்தோடு களமிறங்கியுள்ளார் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ்.

'யார் வேட்பாளராக களமிறங்கினாலும் அது எங்களின் பாரம்பரியத் தொகுதி; அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்' என்ற வசனங்களுடன் மல்லுக்கட்ட களமிறம்கியுள்ளது மஇகா.

மஇகா - மைபிபிபி ஆகிய இரு கட்சிகளின் அரசியல் போராட்டத்தால் தற்போது 'அரசியல் சூட்டை' எதிர்கொண்டுள்ள கேமரன் மலை. இந்நிலையில் 'கேமரன் மலையை மீண்டும் அழகாக்குவோம்' என்ற முழக்கத்துடன் களமிறங்கிய டான்ஶ்ரீ கேவியசுடன்  'மை பாரதம்' மின்னியல் ஊடகம் சிறப்பு நேர்காணல் மேற்கொண்டது.

அந்த நேர்காணல் அதன் வாசகர்களுக்காக இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

கே: கேமரன் மலையில் எத்தனை ஆண்டு காலமாக சேவையாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?

: கடந்த 4 ஆண்டுகளாக இங்கு சேவையாற்றி கொண்டிருக்கிறேன். இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் என மஇகா எப்போது அறிவித்ததோ அப்போதே எனது சேவையை இங்கு தொடங்கி விட்டேன்.

கே: கேமரன் மலையில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன?
ப: கேமரன் மலையில் உள்ள மக்களின் முதன்மை தொழிலே விவசாயம் தான். அதுவும் சொந்தத் தொழில்.  அதனை சுற்றியே இங்குள்ள மக்களின் பெருவாரியான பிரச்சினைகள் உள்ளடங்கியுள்ளன.

விரிவாக சொல்ல வேண்டுமானால் இங்குள்ள மக்கள் 4 விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

1). தொடக்க காலத்தில் இங்கு இந்தியர்கள், சீனர்கள், அதனை தொடர்ந்த் பூர்வக்குடியினர் வந்தனர். பெரும்பாலான இந்தியர்கள் இங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்ற அழைத்து வரப்பட்டனர்.

அங்கு வேலை செய்து கொண்டே பின்னர் விவசாயத்தில் ஈடுபட்டனர். கீரை, காய்கறிகள், ஸ்ட்ராபெர்ரி, சோளம் போன்றவற்றை பயிரிட்டு வந்துள்ளனர்.
விவசாயம் செய்வதற்கு மிக முக்கியமானது நிலம். அதற்கேற்ப இங்குள்ள நிலங்கள் யாவும் அரசாங்கத்துடையது என்பதால் மக்கள் அவற்றை அரசாங்கத்திடமிருந்து வாங்கினர்.

அரசாங்கமும் விவசாயம் மேற்கொள்ள மக்களுக்கு நிலங்களை வழங்கியது. பெரும்பாலும் சீனர்கள் இங்கு நிலங்களை வாங்கி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிற வெளி மாநிலங்களிலிருந்தும் சீனர்கள், இந்தியர்கள் வந்து விவசாயம் செய்யும் போது  விவசாயம் செய்வதற்கு போதிய நிலம் இல்லாத சூழல் நிலவியது.

சில ஆண்டுகளுக்கு பின்னர் தங்களது நிலத்திற்கு அருகில் காடாக இருந்த நிலங்களை ஆக்கிரமித்து விவசாயம் மேற்கொள்ள தொடங்கினர். 10 ஏக்கர் நிலங்களை கொண்டவர்கள் இத்தகைய நடவடிக்கையினால் 50, 100  ஏக்கர் என விவசாயங்களை துரிதப்படுத்திக் கொண்டனர்.

சட்டவிரோத ஆக்கிரமிப்பினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை உணர்ந்த அரசாங்கம் அதனை கட்டுப்படுத்த முற்பட்டது. அதன்படி நில உரிமையாளர் அவரவர் நிலங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் மற்ற நிலங்களை ஆக்கிரமிக்கக்கூடாது எனவும் தடை போட்டது.

2). இதன் மூலம் மற்றொரு பிரச்சினை உருவெடுத்தது. முன்பு இலவசமாக தண்ணீரையும் மின்சாரத்தையும் பயன்படுத்தி வந்த விவசாயிகளிடம் தண்ணீருக்கும் மின்சாரத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அது மட்டுமல்லாது பெரும்பாலானோரின் நிலம் டி.ஓ.எல். பெற்றது என்பதால் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. சில சமயங்களில் 5, 10 ஆண்டுகளுக்கு டி.ஓ.எல். கட்டணம் செலுத்தவர்களை ஒரே நேரத்தில் செலுத்துமாறு மாவட்ட நில அலுவலகத்தில் நெருக்குதலையும் சிலர் எதிர்கொண்டுள்ளனர்.

3). முன்பு எங்களது தாத்தா, பாட்டி ஆகியோர் விவசாயத்தில் ஈடுபட்டனர். ஆனால் பினவரும் தலைமுறையினர் நன்கு படித்து வெளியிடங்களுக்கு செல்கின்றனர். அதனால் அங்கு வேலை செய்ய ஆள்பல பற்றாக்குறை நிலவுவதால் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டு முதல் இங்கு வங்காளதேசிகள் முதன் முதலாக வந்தனர். அவர்களை தொடர்ந்து நேப்பாள்வாசிகளும் வந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக  இங்கு அந்நிய நாட்டவர்கள் பணியாற்றி வரும் நிலையில் தற்போது பணியாளர் பிரச்சினையும் உள்ளது.

4.) இங்கு விவசாயம் மேற்கொள்வோர் தங்களது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதில் போக்குவரத்து பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். இங்கு தினமும் பல லோரிகளும் வாகனங்களும் சென்றுக் கொண்டிருப்பதால் சாலை வசதி பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முறையாக இல்லாத சாலையினால் போக்குவரத்து இடைஞ்சலை எதிர்கொள்ள நேரிடுகிறது. இந்த இடம் விவசாயம் மட்டுமல்லாது சுற்றுப்பயணிகளின் தலமாகவும் திகழ்கிறது.

வாகன நெரிசல், சுற்றுப்பயணிகளின் வருகை போன்றவற்றினால் போக்குவரத்து பெரும் பிரச்சினையாக இங்குள்ள மக்களுக்கு மாறியுள்ளது.

கே: கடந்த  4 ஆண்டுகளாக இங்கு சேவை செய்து வரும் நீங்கள், இப்பிரச்சினைகளுக்கு  எத்தகைய தீர்வு காண முற்பட்டுள்ளீர்கள்?

ப: இந்த பிரச்சினைகளை சாதாரணமாக தீர்த்து விட முடியாது. மக்கள் பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படலாம. அதற்கான வழிமுறைகளும் உள்ளன. ஆனால் அவற்றை தீர்த்து வைப்பதற்கான அதிகாரம் தான் தேவைப்படுகிறது. அந்த அதிகாரம் என்னிடம் இருந்தால் இப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை என்னால் கொண்டு வர முடியும்.

கே: கேமரன் மலை தொகுதியின் வேட்பாளராக உங்களை அடையாளப்படுத்திக் கொள்வதன் பின்புலம்?

: இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றது மஇகா தான். கடந்த இரு தவணைகளாக ஒருவர் போட்டியிட்டு வென்றார். மூன்றாவது முறையாக அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் போட்டியிட்டு வென்றார்.

இங்கு போட்டியின்ற வென்ற இருவருக்கும் கேமரன் மலைக்கும் தொடர்பே கிடையாது.  ஆனால் நான் இங்கேயே பிறந்து வளர்ந்தவன். இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை நங்கு உணர்ந்தவன் நான். இங்கு வெற்றி பெற்ற பழனிவேலை கட்சியிலிருந்து (2015ஆம் ஆண்டில்) நீக்கிய பின்னர் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் என்னை அழைத்து, 'கேமரன் மலைக்கு செல்கிறீர்களா? பழனிவேலையும் கட்சியிலிருந்து நீக்கி விட்டனர். அங்கு பல பிரச்சினைகளை இருக்கின்றன. உங்களுக்கு அங்கு போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டியிடுவீர்களா? என கேட்டார்.

அங்கு பிறந்து வளர்ந்தவன் என்பதால் அங்கு உறவினர்கள் மட்டுமல்லாது பெரும்பாலானவர்களை நன்கு அறிந்து வைத்துள்ளேன். கேமரன் மலை தொகுதி எனக்காகவே உருவாக்கப்பட்டது. லிப்பிஸ் நாடாளுமன்றத் தொகுதியை பிரித்து கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.அதனை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஆனால் 2003இல் துன் மகாதீர் பதவி விலகியது அடுத்த பிரதமராக பொறுப்பேற்ற துன் அப்துல்லா படாவியிடன் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு பேசி கேமரன் மலை தொகுதியை தட்டி பறித்துக் கொண்டார்.

இங்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். எனக்காக  உருவாக்கப்பட்ட தொகுதியில் களப்பணி ஆற்ற ஒரு வாய்ப்பு வழங்கப்படும்போது அதனை ஏற்று கடந்த 4 ஆண்டுகளாக சொந்த செலவில் மக்களுக்கான சேவையை மேற்கொண்டு வருகிறேன்.

பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரே இங்கு தன்னை வேட்பாளராக அடையாளப்படுத்தி மக்களுக்கான சேவையை மேற்கொண்டு வருகிறேன்.

நாளை தொடரும்... -

No comments:

Post a Comment