நேர்காணல்: ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்
கேமரன் மலை-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி உறுப்பினராக டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் இன்னமும் நீடித்திருந்தால் நிச்சயம் அங்கு நான் களமிறங்கியிருக்க மாட்டேன்.
ஆனால், அவரை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்த பின்னரே அங்கு சேவையாற்ற களமிறங்கினேன். தேசிய முன்னணி பிரதிநிதித்து டத்தோஶ்ரீ பழனிவேல் அங்கு இருந்திருந்தால் நான் அவருக்கு தொல்லைகள் கொடுத்திருக்க மாட்டேன்.
தான் சார்ந்துள்ள ஒரு கூட்டணியை பிரதிநித்து ஒருவர் இருக்கும் சூழலில் அங்கு களமிறங்கி சேவையாற்றுவது ஆரோக்கியமான நடவடிக்கையாக கருத முடியாது. அதனால்தான் நானும் அமைதியாக இருந்தேன்.
ஆனால் டத்தோஶ்ரீ பழனிவேலை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களைக்கு மஇகா அதிகாரப்பூர்வமாக தெரிவித்த பின்னரே அத்தொகுதியில் தேமுவின் வெற்றியை உறுதி செய்ய களமிறங்கினேன் என்கிறார் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ்.
அண்மையில் 'மை பாரதம்' மின்னியல் ஊடகம் அவருடன் மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின் தொடர்ச்சி இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
கே: தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலை சந்திப்பதுண்டா?
ப: தொடக்கத்தில் இங்கு சேவையாற்ற வந்தபோது டத்தோஶ்ரீ பழனிவேலை சந்தித்துள்ளேன். சில நிகழ்வுகளில் அவருடன் பங்கேற்றுள்ளேன். ஆனால் இப்போது அவரை சந்திப்பது குறைவாக உள்ளது.
கே: டத்தோஶ்ரீ பழனிவேல் இங்கு போட்டியிடுவதாக இருந்தால் நீங்கள் போட்டியிட எத்தனித்திருப்பீர்களா?
ப: நிச்சயமாக இல்லை. மஇகாவின் தலைவராக டத்தோஶ்ரீ பழனிவேல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தால் நிச்சயம் நான் இங்கு களமிறங்கியிருக்க மாட்டேன்.
ஆனால், மஇகாவின் உட்பூசலில் தேசியத் தலைவராக இருந்த அவரை கட்சியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்களவைக்கு தெரியப்படுத்திய பின்னரே கேமரன் மலையில் களமிறங்கினேன்.
கே: கேமரன் மலைன் தொகுதியில் நீங்கள் (டான்ஶ்ரீ) போட்டியிடாமல் மஇகா வேட்பாளர் போட்டியிட்டால் மைபிபிபி ஆதரவளிப்பீர்களா?
ப: எவ்வாறு ஆதரவு கொடுக்க முடியும். கட்சி உட்பூசலை அடுத்து இங்கு களமிறங்கி மக்களுக்கு சேவை செய்ய மஇகா முனையவில்லை. கடந்த நான்காண்டுகளாக நான் இங்கு களமிறங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். 'உண்மையான சேவையாளன்' யார் என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக சேவை செய்து இங்கு தேசிய முன்னணிக்கான வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளேன். கஷ்டப்பட்டு சேவை செய்துள்ள தனக்கு 'சீட்' கிடைக்காமல் பிறருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் கட்சி உறுப்பினர்கள் அதனை எவ்வாறு ஏற்றுக் கொள்வர்? தேமு எனும் நிலையில் நான் ஆதரித்தாலும் கட்சி உறுப்பினர்கள், வாக்காளர்களின் ஆதரவை பெற நிச்சயம் பெற முடியாது.
கே: நீங்கள் போட்டியிட்டால் கேமரன் மலை மஇகாவினர் ஆதரிப்பார்கள் என நினைக்கிறீர்களா?
ப: நிச்சயம் ஆதரவு கிடைக்கும். கேமரன் மலை எனக்கு புதிதானது அல்ல. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெந்தா தோட்டத்தில்தான். இங்கே எனக்கு அதிகமாக உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். எனது சொந்த மண்ணில் நிச்சயம் எனக்கான ஆதரவு கிடைக்கும்.
மஇகாவில் உள்ள பெரும்பாலானவர்கள் எனது உறவினர்கள், நண்பர்களாக
இருக்கின்றனர். அதன் அடிப்படையில் எனக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும்.
நான் இங்கு போட்டியிட்டால் நிச்சயம் தேசிய முன்னணி வெற்றி பெறும். என்னை தவிர யார் போட்டியிட்டாலும் அவர்களின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியே.
இதை நான் எச்சரிக்கையாக சொல்லவில்லை. இதுதான் உண்மை. ஆதலால் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை வேட்பாளர் விவகாரத்தில் தேசிய முன்னணி சிறந்த முடிவை எடுக்கும் என நம்புகிறேன்.
- நன்றி -
முந்தைய பதிவுகளுக்கு:
- கேமரன் மலையை இழந்து விடக்கூடாது என்பதற்காக பிரதமர் தேடிய 'அருமருந்து'தான் நான் - டான்ஶ்ரீ கேவியஸ்- பகுதி- 2
Article Link:https://mybhaaratham.blogspot.my/2018/03/2_21.html
- எனக்கான தொகுதியில் பிரதமரின் 'ஆசி'யுடனே 'வேட்பாளராக' என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன் - டான்ஶ்ரீ கேவியஸ் - பகுதி -1
No comments:
Post a Comment