ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்ற சூழலில் வேட்பாளர் விவகாரம் தற்போது சூடு பிடித்து வருகிறது.
மஇகாவின் பாரம்பரியத் தொகுதி எனவும் தேசியத் தலைவர்கள் அலங்கரித்த தொகுதி எனவும் மார் தட்டிக் கொள்ளும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் 'வேட்பாளர் யா?' என்ற கேள்விக்கு இன்னமும் விடை தெரியாமல் உள்ளூர் மஇகாவினர் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை கண்காணிக்க மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ எஸ்.சோதிநாதனை கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் களமிறக்கியுள்ளார்.
கடந்த இரு வாரங்களாக டத்தோ சோதிநாதன் இங்கு களமிறங்கி தொகுதி மஇகாவினரையும் தேர்தல் நடவடிக்கை மையங்களையும் சென்று பார்வையிட்டு உள்ளூர் கட்சியினரிடையே பலம் உண்டாக்க முனைகிறார்.
ஆயினும் மஇகாவில் நிலவிய தலைமைத்துவ உட்பூசல், நீதிமன்ற வழக்கு ஆகியவற்றுக்கு டத்தோ சோதிநாதன் ஒரு காரணமானவர் என்பதால் இங்குள்ள சில கிளைத் தலைவர்களிடம் 'அதிருப்தி அலை' மேலோங்கி நிற்கிறது.
அதுமட்டுல்லாது சுங்கை சிப்புட்டில் வெற்றி பெற வேண்டுமானால் இங்கு களமிறங்கும் வேட்பாளர் 'கரன்சியை' அள்ளி கொடுப்பவராக திகழ வேண்டும். அதுதான் இங்குள்ள பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாகவும் திகழ்கிறது.
அதன் அடிப்படையில் செல்வாக்கு மிக்கவராகவும் மஇகாவின் தலைமை பொருளாளராகவும் இருக்கின்ற டத்தோஶ்ரீ வேள்பாரி வேட்பாளராக களமிறங்க வேண்டும் எனவும் அவர் வந்தால் தேமுவின் வெற்றி உறுதி செய்யப்படும் எனவும் சில கிளைத் தலைவர்களும் அரசு சார்பற்ற பொது இயக்கத்தினரும் கோரிக்கைகளை விடுக்கின்றனர்.
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துன் ச.சாமிவேலுவின் 'ஆதிக்கம்' இங்கு இன்னும் நிலவுவதால் அதுகூட டத்தோஶ்ரீ வேள்பாரியின் வெற்றிக்கு உறுதுணையாக அமையலாம் என கணிக்கப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேசிய முன்னணி தேர்தலுக்கு தயாராகவுள்ள நிலையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் டத்தோ சோதியா? டத்தோஶ்ரீ வேள்பாரியா? என்பது தெரிந்து விடும்.
No comments:
Post a Comment