Friday 9 March 2018

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கை; இந்தியர்களை அரவணைக்குமா? புறக்கணிக்குமா?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்), தனது தேர்தல் கொள்கை அறிக்கையை இன்று அறிவிக்கின்ற நிலையில் 'இந்தியர்களை அரவணைக்குமா?, புறக்கணிக்குமா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று ஷா ஆலம், ஐடிசிசி மண்டபத்தில் தனது தேர்தல் கொள்கை அறிக்கையை  அறிமுகம் செய்கின்ற பக்காத்தான் ஹராப்பான், தனது  விளம்பர அட்டையில் இந்தியத் தலைவர்களை இடம்பெறச் செய்யாதிருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்திய சமுதாயத்திற்கு எத்தகைய பயனுள்ள திட்டங்களை அக்கூட்டணி அறிவிக்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இந்திய சமுதாயத்தின் வாக்குகளே வரும் தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்ற அடிப்படையில்  பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இந்திய சமுதாயத்திற்காக வழங்கும் சலுகைகள், உரிமைகள் என்னவென்பதே தற்போதைய பெரும் எதிர்பார்ப்பாகும்.

இந்தியர்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காகவே ஹிண்ட்ராஃப், நியூ ஜென் பார்ட்டி போன்றவற்றை வியூக பங்காளி கட்சிகளாக பக்காத்தான் ஹராப்பான் இணைத்துக் கொண்டுள்ளது.

இந்திய சமுதாயத்தை அரவணைத்து  தனது கொள்கையில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி காணுமா, அல்லது இந்தியர் நலனை புறக்கணித்து மண்ணை கவ்வுமா? என்பது தேர்தல் கொள்கையின்  உள்ளடக்கங்களை பொறுத்தே அமையவுள்ளது.

No comments:

Post a Comment