Wednesday 28 March 2018

திருமதி இந்திரா காந்திக்கு அமெரிக்காவின் 'துணிச்சல்மிகு பெண்' விருது


 கோலாலம்பூர்-
ஒருதலைபட்சமாக தனது மூன்று பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தி வெற்றி கண்ட திருமதி இந்திரா காந்தியின் பெயர் அமெரிக்காவின் 'துணிச்சல்மிக்க பெண்' விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தமக்கு தெரியாமல் தனது முன்னாள் கணவர் கே.பத்மநாபன் மூன்று பிள்ளைகளையும் மதமாற்றம் செய்ததை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியவர் திருமதி இந்திரா காந்தி.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போராட்டத்தை மேற்கொண்ட இந்திரா காந்தியின் செயலை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இவ்வாண்டின் உலக மகளிர் தினம், மார்ச் மாதம் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டு வரும் மகளிர் வரலாற்று மாதத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் கமலா ஷிரின்  நாளை நடைபெறும் விருந்துபசரிப்பு நிகழ்வில் இந்த விருதை இந்திரா காந்திக்கு வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

ஒருதலைபட்சமாக  செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் மதமாற்றமும் செல்லத்தக்கது அல்ல என கடந்த ஜனவரி 29ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமெரிக்காவின் அனைத்துலக துணிச்சல்மிக்க பெண்மணி விருது சிறந்த தலைமைத்துவ ஆற்றல், துணிச்சல், அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டோலேசா ரைஸால்  அறிமுகம் செய்யப்பட்ட இவ்விருதை மலேசியாவின் திருநங்கைகள் போராட்டவாதியான நிஷா ஆயோப் 2016இல் பெற்றார்.

No comments:

Post a Comment