Tuesday 27 March 2018

எதிர்க்கட்சியை ஆதரித்தது போதும்; இனியும் தண்டிக்கப்பட வேண்டாம்- மஇகா இளைஞர் பிரிவு சாடல்


ரா.தங்கமணி, கோ.பத்மஜோதி

சுங்கை சிப்புட்-
எதிர்க்கட்சியின் ஆட்சியில் கடந்த இரு தவணைகளாக சுங்கை சிப்புட் மக்கள்  தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த தண்டனையிலிருந்து மீள வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு சுங்கை சிப்புட் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தினாளன் ராஜகோபாலு தெரிவித்தார்.

மக்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதே தங்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதே ஆகும். ஆனால் கடந்த இரு தவணைகளாக  தவறான ஒரு மக்கள் பிரதிநிதியை இங்குள்ள மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதன் விளைவாகவே இங்குள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டு அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மானியங்கள் இல்லாமல் மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒரே காரணம் தங்களின் பிரதிநிதியாக எதிர்க்கட்சியினரை தேர்ந்தெடுத்ததன் விளைவே ஆகும் என நேற்று இங்குள்ள அரேனாவில் நடைபெற்ற 'பிஎன் 4 யூ' நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு  தீர்வு காண்பது மஇகாவும் தேசிய முன்னணியும் தான் ஆகும்.

ஆகவே, வரும் பொதுத் தேர்தலில் இங்கு களமிறங்கும் தேசிய முன்னணி வேட்பாளரை மக்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டும். அவரின் வெற்றிக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தினாளன் வலியுறுத்தினார்.

மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரும் சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான மு.நேருஜி உரையாற்றுகையில், எதிர்க்கட்சியின் ஆட்சியில் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தையே அடமானம் வைத்து விட்டனர்.

மானியம் வழங்கப்படாமல் எவ்வித சமூகநல உதவிகளும் இல்லாமல் மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர வேண்டும். இந்த தண்டனை எல்லாம் போதும். இனிமேலாவது அந்த தண்டனையிலிருந்து விடுபட மக்கள் முனைய வேண்டும்.

ஆதலால் வரும் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் தேசிய முன்னணி வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

புகழ் பெற்ற உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளுடன்  நடைபெற்ற இந்நிகழ்வில் லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஜி சூல்கிப்ளி, சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர் கி.மணிமாறன், உதவித் தலைவர் முனைவர் சண்முகவேலு, மஇகா இளைஞர் பிரிவினர், பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment