Thursday 22 March 2018

சுங்கை சிப்புட் தொகுதியை மீட்டெடுக்க யோகேந்திரபாலனுக்கு வாய்ப்பளியுங்கள்; பொது இயக்கங்கள் கோரிக்கை


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக 'மண்ணின் மைந்தன்' யோகேந்திரபாலன் களமிறக்கப்பட வேண்டும் என அரசு சார்பற்ற  பொது இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த 12,13ஆவது பொதுத் தேர்தல்களில் களமிறங்கிய தேசிய முன்னணி வேட்பாளர்கள் தோல்வி கண்டனர். அதன் அடிப்படையில் வரும் தேர்தலில் தேசிய முன்னணி இத்தொகுதியை வென்றெடுக்க வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின்போது வேட்பாளராக களமிறங்கிய டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி போட்டியிட்டு தோல்வியை தழுவியது ஒரு தவிர்க்க முடியாத சூழலாகும். ஆயினும் அவர் தோல்விக்கு பின்னர் இங்கு களமிறங்கி மக்களுக்கு சேவை செய்வதை தவிர்த்து விட்டார்.

இந்த சூழலில்தான் மக்களுக்கு சேவை செய்ய மண்ணின் மைந்தரும் தொழிலதிபருமான யோகேந்திரபாலன் களமிறங்கினார். கடந்த ஐந்தாண்டுகளாக சேவை செய்து வரும் யோகேந்திரபாலன் இங்குள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமாகியுள்ளதோடு மக்களுக்கான சேவையையும் முன்னெடுத்து வருகிறார் என சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்தின் தலைவர் வீ.சின்னராஜு, சுங்கை சிப்புட் ஒரே மலேசியா இயக்கத்தின்  தலைவர் ர.கணேசன் ஆகியோர் வலியுறுத்தினர்.
யோகேந்திரபாலன்
மக்கள் சேவையில் களமிறங்கியுள்ள யோகேந்திரபாலன் இங்கு வறுமையில் வாடும் குடும்பங்களுக்கும் அடிப்படை வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கும் பல்வேறு வகையில் சேவை செய்து வருவதோடு இந்தியர்கள் மட்டுமின்றி அனைத்து இன மக்களையும் கவர்ந்துள்ளார்.

வரும் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரையே பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான  டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் விரும்புகிறார் எனும் நிலையில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள யோகேந்திரபாலனை இத்தொகுதியின் தேமு வேட்பாளராக களமிறக்கினால் நிச்சயம் எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து கிடக்கும் இத்தொகுதியை மீட்க முடியும் என  சின்னராஜு, கணேசன் ஆகியோர் கூறினர்.
சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்தினர்...

'மக்களோடு நான்; மக்களுக்காகவே நான்' எனும் கோட்பாட்டை நிலைநிறுத்தி மக்கள் சேவையில் களமிறங்கியுள்ள யோகேந்திரபாலனுக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்குவதை தேசிய முன்னணி தலைமைத்துவம் பரிசீலிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment