Wednesday 24 January 2018

தமிழ்ப்பள்ளிகளுக்கு வருகை புரியும் கமலநாதன் ஒரு தீர்வை தருவாரா?


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் நாளை மறுநாள் 25 ஆம் தேதி சுங்கை சிப்புட் வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு வருகை புரியும் வேளையில் இங்கு நிலவும் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்துவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மஇகாவின் பாரம்பரியத் தொகுதிகளில் ஒன்றான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் சில பள்ளிகள் இன்னும் அடிப்படை பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன என்பதை மறுக்க முடியாது.

* சுங்கை ரேலா தமிழ்ப்பள்ளி
- சுங்கை ரேலா தோட்டத்திலிருந்த மக்கள் வெளியேறி நகர்ப்புறத்திற்குச் சென்றதன் விளைவாக பெருமளவு மாணவர் எண்ணிக்கை சரிவை எதிர்கொண்ட சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளி, அருகிலுள்ள சுங்கை குருடா தோட்டத்திற்கு மாற்றலாகி செல்வதற்காக புதிய பள்ளிக்கூடம் நிர்மாணிக்கப்பட்டது.

ஆனால் இந்த பள்ளிக்கூடத்தின் 95 விழுக்காட்டு பணிகள் பூர்த்தி அடைந்துள்ள நிலையில் கடந்த வருடமே திறப்பு விழா காணும் என எதிர்பார்க்கப்பட்ட இப்பள்ளி இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது.

* டோவன்பி தமிழ்ப்பள்ளி
- அதிகமான இந்தியர்கள் வசிக்கும் டோவன்பி தோட்டத்தில் உள்ள டோவன்பி தமிழ்ப்பள்ளிக்கு புதிய இணைக் கட்டடம் நிர்மாணிக்கப்படும் என மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ  ஜி.பழனிவேல் கடந்த 2012இல் அறிவித்தார்.

ஆனால் பொதுத் தேர்தல் முடிந்து, கட்சியின் தேர்தலுல் நடைபெற்று, அதில் பல விவகாரங்கள் வெடித்து, அமைச்சர் பதவியையும்  இழந்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இன்று சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராகவும் டத்தோஶ்ரீ பழனிவேல் மாறிவிட்டார்.

ஆனால் அவர் வாக்குறுதி அளித்த டோவன்பி தமிழ்ப்பள்ளிக்கான புதிய இணைக் கட்டடம் தான் எப்போது நிர்மாணிக்கப்படும்? என்ற முடிவு காணப்படாமல் கிடக்கிறது.

* சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
- சாலாக் தோட்ட மக்கள் பெரும்பாலானோர் நகர்ப்புறத்திற்கு குடியேறி விட்ட நிலையில் உட்புறப் பகுதியில் அமைந்துள்ள சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியை மக்கள் குடியிருக்கும் இடத்திற்கு இடமாற்றம் செய்ய பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியக்குழு ஆகியவை முயற்சி செய்து நிலத்தை அடையாளம் கண்டு அவற்றை பள்ளிக்கு உறுதி செய்தும் விட்டது.

தற்போதைய மஇகாவின் துணைத் தலைவரும் பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணியின் நடவடிக்கையினாலும் தற்போதைய சுங்கை சிப்புட்  மஇகா தலைவர் இளங்கோவன் முயற்சியினாலும் நிலத்திற்கான உறுதிக் கடிதம் பெறப்பட்டுள்ள நிலையில் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கான உறுதி எப்போது வழங்கப்படும்?

இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் சுங்கை சிப்புட் தமிழ்ப்பள்ளிகள் அவலநிலையை எதிர்கொண்டுள்ள சூழலில் டத்தோ கமலநாதன் இவற்றுக்கு எத்தகைய தீர்வை வழங்கவுள்ளார்.

தமிழ்ப்பள்ளிகள் மீதான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை காண டத்தோ கமலநாதன் தவறி விட்டால், இப்பிரச்சினைகளே வரும் பொதுத் தேர்தலில் மஇகாவுக்கு எதிரான 'ஏவுகணைகளாக' பாய்ச்சப்படலாம்.

No comments:

Post a Comment