Sunday 14 January 2018

மக்கள் பணத்தை 'கொள்ளையடிக்க' தெரியாதவன் நான் - ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ்

கோ.பத்மஜோதி,வி.மோகன்ராஜ்

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநில மக்களின் நல்வாழ்வுக்காக ஒதுக்கப்படும் நிதி ஒருபோதும் தவறாக கையாளப்படுவதில்லை. 'மக்களின் பணம் மக்களுக்கே' என்ற கோட்பாட்டை சிலாங்கூர் மாநில அரசு கொண்டிருக்கிறது என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் தெரிவித்தார்.

இம்மாநிலத்திலுள்ள வறிய மக்களின்  நிலையை மாற்றிட மாநில அரசாங்கம் பலவிதமான திட்டங்களை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில அரசு முனைந்துள்ளது.

மாநில அரசில் ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி வகிக்கும் தாம், இந்தியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறேன். குறிப்பாக  மக்கள் நலத் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளேன்.

மக்களுக்கு ஒரு சிறந்த அரசாங்கம் அமைந்துள்ளது என்பதை நிரூபிக்கவே இப்பதவியில் பல திட்டங்களை வகுத்து செயல்படுத்துகின்றோம். மக்களுக்கான நலத் திட்டங்களில் சுயலாபம் காண்பதையோ கையாடல் செய்வதையோ நான் ஒருபோதும் விரும்புவதில்லை. இதனால் சில சுயலாப விரும்பிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மக்கள்  பணத்தை 'கொள்ளையடிக்க' தெரியாததால்தான் எவ்வித பலனையும் காணாத சிலர் என் மீது தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர் என அண்மையில் 'பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின்போது தெரிவித்தார்.

அரசியல், இந்தியர்களின் பிரச்சினை, மானிய ஒதுக்கீடுகள், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்றவை தொடர்பில் இவருடன் நடத்தப்பட்ட முழுமையான நேர்காணல் நாளை தொடங்கி 'பாரதம்' மின்னியல் ஊடகத்தில் அதன் வாசகர்களுக்காக தொகுக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment