Thursday 11 January 2018

மன்னரின் செங்கோல் போன்றது நிருபரின் 'பேனா'; மக்கள் கருத்து- பகுதி - 2


புனிதா சுகுமாறன்

 ஜனநாயக நாட்டின் ஊடக சுதந்திரம் கட்டிக் காக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்த சுதந்திரம் தழைத்தோங்க ஊடகங்களும் நிருபர்களும் ஊடக தர்மத்தை கடைபிடிப்பது அவசியமானதாகும்.

ஊடகங்கள் நினைத்தால் எதனையும் சாதிக்கலாம். அதற்கு உலகளவிலான பல உதாரணங்கள் இருக்கலாம். நமது நாட்டிலும் 'அரசியல் சுனாமி' ஏற்பட்டதற்கு ஊடகங்களின் பங்களிப்பு பெருமளவு உள்ளது.

அத்தகைய ஊடகங்கள் இன்று மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனவா?, ஊடகங்கள், நிருபர்கள் எப்படி இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்? போன்ற கேள்விகளுக்கு மக்களின் மனவோட்டங்கள் என்னவென்பது இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.


* சுப.சற்குணன்
- நிருபர்கள் சமுதாயச் சிற்பிகள். தமிழ்ச் சமூகம் எப்படி இருக்க வேண்டும்; எப்படிச் சிந்திக்க வேண்டும்; எப்படி பயணிக்க வேண்டும் என்பதை நிருபர்கள் தங்கள் பேனா முனையால் செதுக்கிட முடியும். அதே போல் நிருபர்கள் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த 'மனம்' என்று கூறலாம். சமுதாயம் என்ன நினைக்கிறது; சமூகத்திற்கு என்ன தேவை என்பதை நிருபர்களின் எழுத்துகள் எதிரொலிக்க வேண்டும். நிருபர்கள் 'பேனா' மன்னரின் செங்கோல் போல யாருக்கும் எங்கும் வளையாமல் இருந்தால் அவர்கள் எழுத்துகள் மக்களால் வேதப்புத்தகமாக மதிக்கப்படும்.

* சண்முகம் கிருஷ்ணன் - மலேசிய அபிராம் இயக்கம்
- என்னதான் நவீனத்துவம் வந்தாலும் ஒரு நிருபர் ஆக்கபூர்வமான செய்திகளை , சரியான தகவல்களோடு வெளியிட வேண்டும். அப்போதுதான் ஊடகத்தின் மீதான நம்பிக்கை மக்களிடம் வலுபெறும்.

* லெட்சுமி நாயர்
- மக்கள் இன்று ஒரு தகவல்களை தெரிந்துக்கொள்கின்றனர் என்றால் அதற்கு முதல் காரணம் ஊடகவியலாளர்கள்தான்.  அத்தகைய ஊடகவியலாளர்கள்  எந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு கொண்டு செல்லும் செய்தி உண்மையாக இருக்க வேண்டும்.

இன்று அனைவரும் பரபரப்பான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டம்.  அப்படியிருக்கையில் பத்திரிகை செய்தியாக இருக்கட்டும்; சோஷியல் மீடியாவாக இருக்கட்டும் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

* சிவா - காப்புறுதி முகவர்
- பத்திரிகை சுதந்திரம் என்பது நம் நாட்டில் நடுநிலையாகதான் இருக்கிறது. எப்படி இருப்பினும் ஒரு நிருபர் உண்மை செய்திகளை வெளிப்படுத்த வேண்டும்.

* அண்ணாமலை- கெடா
- இப்போது உள்ள காலகட்டத்தில் ஊடகம் பெரும் தொண்டாற்றுகிறது. ஊடகம் வழியாக பல தகவல்களை விரைவில் தெரிந்துகொள்ள முடிகிறது.
ஓர் ஊடகவியலாளர் மக்கள் விரும்பும் செய்திகள் என்ன என்பதை அறிந்து ஊழல் புரியும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.  மக்களுக்கு உண்மையான தகவலை சேர்ப்பவராக ' 'பேனாக்காரர்கள்' விளங்கிட வேண்டும்.

* பாலநாராயணன்
- நீதி, நேர்மை, நியாயம், கண்ணியம், கட்டுப்பாடு, ஒற்றுமை ஆகியவற்றை  கொண்டவரே சிறந்த எழுத்தாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

தவறு எங்கே நடந்தாலும் அதை சுட்டிக் காட்ட நிருபர்கள் தயங்கக்கூடாது. அது கோவிலாக இருந்தாலும் பள்ளியாக இருந்தாலும் துணிச்சலுடன் குரல் கொடுக்க வேண்டும்.

- தொடரும் -

No comments:

Post a Comment