Friday 19 January 2018

ஈப்போ இந்திய கலை, கலாச்சார இயக்கத்தின் ஏற்பாட்டில் எம்ஜிஆரின் 101ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

புனிதா சுகுமாறன், படங்கள்: ரா.தங்கமணி

ஈப்போ-
மறைந்தும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்ஜிஆரின் 101ஆவது பிறந்தநாள் விழா நேற்று மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திரைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் புகழின் உச்சிக்குச் சென்ற எம்ஜிஆர், அரசியலிலும் கால்பதித்து வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரியணை அமர்ந்தார்.

நேற்று எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஈப்போ இந்திய கலை, கலாச்சார இயக்கம் ஏற்பாடு செய்த 'காலத்தை வென்றவன்' நிகழ்ச்சி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிந்தா இந்தியர் மண்டபத்தில் 'காலத்தை வென்றவன் 6' நிகழ்ச்சி பட்டி (பாட்டு) மன்றத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து வருகை புரிந்த எட்டு அறிஞர்கள் மிகச் சிறப்பாக வழிநடத்தினர். எம்ஜிஆரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் மனிதநேயமா? திரைத்துறை மூலம் கற்பித்த வாழ்வு நெறிகள? எனும் தலைப்பில் நடைபெற்ற  பட்டி (பாட்டு) மன்றத்தை சென்னை இதயக்கனி இதழ் ஆசிரியர் இதயக்கனி எஸ்.விஜயன் தலைமையில் வழக்கறிஞர் பாலசீனிவாசன், டாக்டர் சுந்தரவள்ளி, சொல்லரசி சுமதிஶ்ரீ, கவிஞர் விஜயகுமார், பேராசிரியர் மணிமேகலை சித்தார்தர், நாவுக்கரசி எழிலரசி ஆகியோர் மிகவும் கலகலப்பாக வழிநடத்தினர்.
இப்பட்டிமன்றத்தின் நடுவராக பேராசிரியர் கி.இராஜகோபாலன் செயல்பட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஈப்போ பாராட் மஇகா தொகுதித் தலைவர் டான்ஶ்ரீ டத்தோ ஜி.இராஜு, சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் அ.பரமேஸ்வரன், பேராக் மஇகா மகளிர் பிரிவின் முன்னாள் தலைவி திருமதி ராமநாயகம், கோப்பெங் தொகுதி மஇகா பொருளாளர் ரகுநாதன் பெருமாள், கலைத்துறையில் நீண்டகாலமாக சேவையாற்றி வரும் விஸ்வநாதன் ஆகியோருக்கு 'எம்ஜிஆர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது. பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ அ.தெய்வீகனின் தாயார் திருவாட்டி லெட்சுமி இவர்களுக்கு சிறப்பு சிறப்பு செய்து விருதுகளை எடுத்து வழங்கினார்.

இந்நிகழ்வை ஈப்போ இந்திய கலை, கலாச்சார இயக்கத்தின் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான பி.பாலையா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வில் பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி, பேராக் மஇகா மகளிர் பிரிவுத் தலைவி திருமதி தங்கராணி, வழக்கறிஞர் அமுசு.பெ.விவேகானந்தன், தொழிலதிபர் ஏ.கே.சக்திவேலு, சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, தொழில் முனைவர் சத்யா உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment