Tuesday 30 January 2018

தேர்தலில் போட்டியிட நானும் தயார்- லோகநாதன் அறிவிப்பு


(ரா.தங்கமணி)
சுங்கை சிப்புட்
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட நானும் விருப்பம் தெரிவித்துள்ளேன். போட்டியிடும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என சுங்கை சிப்புட் மஇகா தொகுதி முன்னாள் தலைவர் லோகநாதன் தெரிவித்தார்.

இத்தொகுதியில் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் வெற்றி வேட்பாளர் யார் என்பதை ஆராய்ந்து வாய்ப்பு வழங்கினால் மட்டுமே இத்தொகுதியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை மஇகா, தேமு தலைமைத்துவம் உணர வேண்டும்.

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது இத்தொகுதியில் போட்டியிட்ட  மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலுவின் தோல்விக்கு நான் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை மறுக்கவில்லை.

அப்போதைய காலகட்டம் எனக்கும் சாமிவேலுவுக்கும் மிகப் பெரிய போராட்ட காலமாக இருந்தது. இருவருக்கும் இடையே விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாத சூழலில் 'அந்த' சம்பம் நிகழ்ந்தது.
இதை துரோகம் என கூற முடியாது. இருவருக்கும் புரிந்துணர்வு இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.

வரும் தேர்தலில் போட்டியிட  4 பேரின் பெயர் பட்டியலை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளதாக  மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறுகிறார்.

அந்த 4 பேரின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்கும் முன்னர் அவர்களால் இங்கு வெற்றி பெற முடியுமா, அவர்களை இங்குள்ளவர்களுக்கு எவ்வளவு நாளாக தெரியும்?,  போட்டியிடவிருப்பவர்க்கு இங்குள்ள நிலவரங்கள் தெரியுமா?, 30 விழுக்காடாக்கும் காடாக உள்ள இங்குள்ள மக்களின் ஆதரவை அவர்களால் பெற முடியுமா? என்ற ஆய்வுகள் நடத்தப்பட்டதா? என இங்கு நடைபெற்ற மாபெரும் பொங்கல் விழாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் லோகநாதன் கேள்விகளை எழுப்பினார்.

வெற்றி பெற வேண்டுமானால் மக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும். அந்த ஆதரவை பெற்ற வேட்பாளர் யார் என்பதை அறிந்து தேர்தலில் களமிறக்குங்கள் என லோகநாதன்  மேலும்  கூறினார்.

சுங்கை சிப்புட் கல்வி சமூகநல இயக்கம் உட்பட பல அரசு சார்பற்ற பொது இயக்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ஓம்ஸ் ப.தியாகராஜன், தொழிலதிபர் டத்தோஶ்ரீ டாக்டர் ஏ.கே.சக்திவேல், மலேசிய அபிராம் சமூகநல இயக்கத்தின் தலைவர் சண்முகம் கிருஷ்ணன், அதன் ஆலோசகர் அமுசு.ஏகாம்பரம்,  சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, செயலாளர் கி.மணிமாறன் தொகுதி மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் மு.நேருஜி, மலேசிய கர்மா இயக்கத்தின் தலைவர் வின்சென்ட் டேவிட்  உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment