Monday 8 January 2018

எரியூட்டி பழுது; புந்தோங் மின்சுடலை மூடப்படுகிறது - ஆர்.வி.சுப்பையா

ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன்

ஈப்போ-
புந்தோங் மின்சுடலையின் இயந்திரம், நீர் குளீருட்டி இயந்திரம் ஆகியவை பழுதடைந்திருப்பதால் அது சீர் செய்யப்படும் வரை இந்த மின்சுடலை மூடப்பட்டுள்ளது என ஈப்போ இந்து தேவஸ்தானத்தின் தலைவர் ஆர்.வி.சுப்பையா தெரிவித்தார்.

இந்த மின்சுடலையில் சடலங்களை எரிப்பதற்கு இரண்டு எரியூட்டிகள் உள்ளன. அதில் ஒன்று கடந்த 19ஆம் தேதி பழுதடைந்தது. சம்பந்தப்பட்ட குத்தகையாளர்கள் பழுதடைந்த எரியூட்டியின் இயந்திரத்தை பழுது பார்க்க கொண்டு சென்ற வேளையில் ஒரு எரியூட்டி மட்டுமே செயல்பட்டு வந்தது.

கடந்த 3ஆம் தேதி ஒரு பெண்மணியின் சடலம் தகனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு எரியூட்டியும் பழுதடைந்தது. ஆயினும் அதன் குத்தகையாளர்களுக்கு தெரியப்படுத்தி அதனை சரி செய்து அந்த  சடலம் தகனம் செய்யப்பட்டது.

மின்சுடலையின் பராமரிப்பாளராக இருந்த லெட்சுமணன் நீர் குளிரூட்டி சூடானதை பரிசோதனை செய்யும்போது கால் இடறி சுடுநீர் தொட்டியில் விழுந்தார். ஆனால் அவரை உடனடியாக காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தோம்.

பிறர் கூறுவது போல் அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. இரவு 10.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் அஸ்தி ஒப்படைக்கப்பட்டது.

எரியூட்டியின் உத்தரவாத காலவரம்பு இன்னும் உள்ளதால் அதனை சீர் செய்யும் பணியை குத்தகையாளரே மேற்கொண்டுள்ளனர். இங்குள்ள இயந்திரம், நீர் குளிரூட்டி இயத்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் சீர் செய்யப்படும் வரை மின்சுடலை மூடப்படுகிறது. அனைத்து பழுதுகளும் சீர்செய்யப்பட்ட பின்னர் பொது மக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்படும் என இன்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுப்பையா கூறினார்.

இதற்கு முன்னர், கடந்த 3ஆம் தேதி ஒரு பெண்மணியின் சடலம் தகனம் செய்யப்படும்போது மின்சுடலையின் எரியூட்டி பழுதானதால் அலட்சியப் போக்கும் பாதுகாப்பின்மையும் நிலவுவதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிப்பிரமணியம் குற்றம் சாட்டியதை ஈப்போ இந்து தேவஸ்தானம் மறுத்தது.

இச்செய்தியாளர் சந்திப்பில் ஈப்போ இந்து தேவஸ்தான செயலவையினரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment