ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
தமிழ்ப்பள்ளிகளை நிர்மாணிப்பதில் இந்திய குத்தகையாளர்களுக்கு அனுபவமில்லாத காரணத்தால் சில தமிழ்ப்பள்ளிகளின் புதிய கட்டடம், இணைக் கட்டட நிர்மாணிப்புப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என கல்ல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகளை பொறுத்த வரையில் புதிய கட்டடம், இணைக் கட்டடங்களை நிர்மாணிக்கும் பொறுப்பு இந்திய குத்தகையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பள்ளி நிர்மாணிப்பு குத்தகைகள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்ப்பள்ளிகள் கட்டட நிர்மாணிப்புப் பணிகளில் சுணக்கம் நிலவுவது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால் இந்த கட்டடங்களை நிர்மாணிக்க இந்தியக் குத்தகையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது என இங்குள்ள மெத்தடிஸ் இடைநிலைப்பள்ளிக்கு வருகை தந்தபொது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ கமலநாதன் கூறினார்.
பள்ளிகளை நிர்மாணிப்பது எளிதான காரியமல்ல. கல்வி அமைச்சு, மாநில, மாவட்ட கல்வி இலாகா, நிலத்தின் உரிமையாளர்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள், மாநகர் மன்றம், தீயணைப்புப் படை உட்பட பல நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. அவற்றின் ஒப்புதலை பெற்று பள்ளிக்கூடம் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்த பின்னரே அப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.
'இவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்வதில் இந்தியக் குத்தகையாளர்கள் அனுபவமில்லாதவர்கள். அதனால் அதன் நிர்மாணிப்புப் பணிகள் நிறைவு பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இப்பிரச்சினைகளை கல்வி அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளது. அப்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு காலதாமதம் ஏற்பட்டுள்ள பள்ளிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் கருணாகரன், லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, சுங்கை சிப்புட் மஇகா தொகுதி உதவித் தலைவர் முனைவர் சண்முகவேலு, தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன், சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் பரமேஸ்வரன், வழக்கறிஞர் அமுசு.பெ.விவேகானந்தா, தொழிலதிபர் யோகேந்திரபாலன் உட்பட பல பிரமுகர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment