Monday 3 December 2018

தேர்தல் கையூட்டு; சிவராஜ் மட்டும்தான் தண்டிக்கப்பட வேண்டியவரா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறும் நோக்கில் வாக்காளருக்கு பணம் கொடுத்துள்ளதாக வழங்கப்பட்ட தீர்ப்பில்  டத்தோ சி.சிவராஜ் மட்டும்தான் தண்டிக்கப்பட வேண்டியவரா?

தனது ஜனநாயகக் கடப்பாட்டை நிறைவேற்றும் வகையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேர்தலில் வாக்காளர்களுக்கு 'கையூட்டு' வழங்குவது தேர்தல் நடைமுறையை மீறிய குற்றமாகும்.

கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ், வாக்குகளை பெறும் நோக்கில் பூர்வக்குடியினத் தலைவர்களுக்கு 'ஏஜெண்டுகள்' மூலம் பணம் கொடுத்துள்ளார் என அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜசெகவின் எம்.மனோகரன் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார் என்பதால் சிவராஜின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பூர்வக்குடியினத் தலைவர்களுக்கு 'ஏஜெண்டுகள்' மூலம் பணம் கொடுக்கவில்லை என்று கூறும் சிவராஜ், தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மனுதாக்கல் செய்யவிருப்பதாக கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை கட்டி காக்கும் தேர்தல் நடைமுறையில் 'கையூட்டு' விவகாரத்தை சாதாரணமாக நாம் கருதக்கூடாது. காசு கொடுத்து வாக்குகளை யார்  வேன்டுமானாலும் வாங்கலாம் என்பதை தண்டிக்கும் வகையில் தேர்தல் வெற்றி செல்லாது எனவும் அத்தொகுதி காலியாக்கப்படுகிறது எனவும் தீர்ப்பளிப்பதில் தவறில்லை; அதில் நாம் தலையிடவும் முடியாது.

ஆனால், காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் வாக்காளனின் போக்கு கண்டிக்கத்தக்கது என்பதை வலியுறுத்த சட்டம் தயாராக உள்ளதா?
பணம் கொடுத்து வாக்கு வாங்கியது தவறென்றால் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதும் தவறுதானே... அத்தகைய வாக்காளருக்கு சட்டம் கொடுக்கும் தண்டனை என்ன? தூய்மையான அரசியல் தழைத்தோங்க வேண்டுமானால் வேட்பாளர் மட்டுமல்ல வாக்காளரும் கரை படியாதவராக இருக்க வேண்டும்.

'லஞ்சம் வாங்குவதும் தவறு; லஞ்சம் கொடுப்பதும் தவறு' எனும்போது லஞ்சம் பெற்றுக் கொண்டு வாக்களித்த வாக்காளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா?, ஒரு தேர்தலில் கையூட்டு பெற்று வாக்களித்தவர் மறு தேர்தலில் கையூட்டு பெற்று வாக்களிக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்போதும் கையூட்டு புகார் நிரூபிக்கப்பட்டால் மீண்டும் இடைத்தேர்தலுக்கு உத்தரவிடப்படுமா? போன்ற கேள்விகள் அணிவகுத்து நிற்கின்றன.

யாரோ ஒருவர் செய்யும் பொறுப்பற்றத் தனத்தால் இன்று மீண்டும் அத்தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கவிருப்பது ஒரு வீண் செலவே ஆகும். இத்தகைய வீண்செலவையும் மக்களுக்கு சுமையையும் ஏற்படுத்திய 'கையூட்டு' வாக்காளருக்கு சட்டம் தண்டனை அளிக்குமா?

தேர்தலில் கையூட்டு கொடுப்பது தவறென்றால் அதன் தண்டனை கொடுப்பவரை மட்டுமல்லாது வாங்குபவரையும் சார்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் 'சட்டம்' எதிர்பாக்கும் நேர்மையான தேர்தல் நடப்பதற்கு வழிவகுக்கப்படும்.

No comments:

Post a Comment