Saturday 4 August 2018

நச்சுணவினால் பாதிப்பு; சம்பந்தப்பட்ட குத்தகையாளரின் ஒப்பந்தத்தை ரத்து செய்க- சிவநேசன்


ரா.தங்கமணி

ஈப்போ-
தைப்பிங்கிலுள்ள மாரா அறிவியல் தொடக்கநிலை கல்லூரியில் (எம்ஆர்எஸ்எம்) பயிலும் மாணவர்கள் நச்சுணவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட உணவு விநியோகிப்பாளருக்கான குத்தகையை மாரா கழகம் ரத்து செய்ய வேண்டும் என மாநில சுகாதாரப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

கடந்த 1ஆம் தேதி நிகழ்ந்த நச்சுணவினால் 103 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளான அவர்கள் தைப்பிங் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றனர்.

கடந்த ஜூலை 12ஆம் தேதியே 40 மாணவர்கள் நச்சுணவினால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரண்டு சம்பவங்களுக்கும் ஒருவரே உணவு விநியோப்பாளராக இருந்துள்ளார்.

ஆகவே, சம்பந்தப்பட்ட உணவு விநியோகிப்பாளரின் குத்தகையை இன்னும் 7 நாட்களுக்குள் மாரா கழகம் ரத்து செய்ய வேண்டும் என கூறிய அவர், குத்தகை முடிவடைய இன்னு 6  மாத காலம் உள்ளது என்ற காரணத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வைக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.

ஒப்பந்த விதிமுறைகளுக்கு ஏற்ப சிறந்த சேவையை வழங்க தவறும் தரப்பினரின் குத்தகையை ரத்து செய்து விடலாம் என்று கூறிய அவர்,  மாரா சட்டப் பிரிவு தொடர்பு கொண்டு உணவு விநியோகிப்பாளரின் குத்தகையை ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக சிவநேசன் கூறினார்.

ஆயினும் மாநில சுகாதார இலாகா சம்பந்தப்பட்ட குத்தகையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் சொன்னார்.

சம்பந்தப்பட்ட கல்லூரியின் உணவுக் கிடங்கு 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மாநில சுகாதார இலாகாவின் கண்காணிப்பில் செமாங்கோலில் இருந்து உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

No comments:

Post a Comment