Wednesday 22 August 2018

சாலைக்கு பெயர் வைப்பதை காட்டிலும் மக்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்துக- மணிமாறன் வலியுறுத்து


ரா. தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நகரில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமேயொழிய சாலைக்கு பெயர் மாற்றுவது முக்கியமான விவகாரம் அல்ல என சுங்கை ரேலா மஇகா கிளைத் தலைவர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

மறைந்த மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் வீ.தி.சம்பந்தன் வீடு அமைந்துள்ள ஜாலான் லிந்தாங் சாலையின் பெயரை துன் சம்பந்தன் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.
சாலைக்கு பெயர் மாற்றம் செய்வதை காட்டிலும் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை திட்டங்களை மேற்கொள்வதே ஆக்கப்பூர்வமானதாகும்.

கடந்த 10 ஆண்டு காலமாக எதிர்க்கட்சி வசம் இத்தொகுதி சென்றதன் காரணமாக எத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக, மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பு, நகர முன்னோடிகள் பிரச்சினை, நிலப் பிரச்சினை போன்றவற்றுக்கு தீர்வு காண முற்படுவதே அத்தியாவசியமானதாகும்.

இங்கு வேலை வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதால் மக்களின்
வாழ்வாதாரம் பின் தங்கிய நிலையில் உள்ளது. இதனை களைவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
மேலும், கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு கல்வி கழகங்கள், நிலப் பிரச்சினையை எதிர்நோக்குபவர்களுக்கு நிலம் ஏற்படுத்துவதற்கான அடிப்படை திட்டங்கள், நகர முன்னோடிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.

லிந்தாங் சாலைக்கும் துன் சம்பந்தன் பெயர் வைப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் சாலைக்கு பெயர் வைப்பதை காட்டிலும்  மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவதே அத்தியாவசியமானதாகும்.

விஸ்மா துன் சம்பந்தன், துன் சம்பந்தன் எம்ஆர்டி நிலையம், பிரிக்பீல்ட்ஸ் துன் சம்பந்தன் சாலை உட்பட மண்படம், பள்ளிக்கூடங்கள் என துன் சம்பந்தனின் பெயர் ஏற்கெனவே பல இடங்களில் உள்ளது. மேலும் ஜாலாங் லிந்தாங் சாலையில் அமைந்துள்ள துன் சம்பந்தன் வீடு என்பதே வரலாறு. அந்த வரலாற்றை மாற்றியமைக்க வேண்டாம்.

தற்போது மத்திய, மாநில அரசு நம்பிக்கைக் கூட்டணி வசம் உள்ள நிலையில் அதனை சார்ந்துள்ள தலைவர்கள் ஆக்ககரமான திட்டங்களை வகுக்க முற்பட வேண்டும் என்று பொதுநலச் சேவையாளருமான மணிமாறன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment