Monday 20 August 2018

குற்றச்செயல்களை முறியடிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்துங்கள் - பொது இயக்கங்கள் கோரிக்கை

ரா.தங்கமணி

காஜாங்-

சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களை துடைத்தொழிப்பதற்கு ஏதுவாக ரகசிய கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி)  பொருத்தப்பட வேண்டும் என்று காஜாங் வட்டார மலேசிய இந்தியர் குரல், காஜாங் மண்ணின் மைந்தர் இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

வாகனம் திருடுதல், கொள்ளைச் சம்பவம், சிறார், இளம் பெண் கடத்தல் போன்ற சம்பவங்கள் காஜாங் வட்டாரம் மட்டுமின்றி பல இடங்களில் நிகழ்ந்து வருகின்றன.

இதுபோன்ற குற்றச்செயல்களை முறியடிக்க போலீசார் ஆக்ககரமான செயல்பட்டாலும் குற்றச்செயல் நடவடிக்கையை குறைக்க முடியவில்லை.

இந்த சம்பவங்களில் இங்குள்ள மக்கள் எப்போதும் அச்சத்துடனே வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. இதனை களைய வேண்டுமானால் பாதுகாப்பற்ற இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என காஜாங் வட்டார மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் தலைவர் சரவணன் கருப்பையா குறிப்பிட்டார்.

குற்றசெயல்களை துடைத்தொழிப்பதில் சிங்கப்பூரை நாம் முன்மாதிரியாக கொள்ள வேண்டும். அங்கு எந்தவொரு குற்றச்செயல் புரிந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம் குற்றச்செயல் பதிவு செய்யப்பட்டு  குற்றம் புரிபவர்கள் தண்டிக்கப்படுவர்.

அதே போன்றதொரு சூழல் இங்கும் உருவாக்கப்பட்டால் குற்றச் செயல்கள் குறைவதோடு காணாமல் போகின்றவர்களையும் கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

இதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர ஆராய வேண்டும் என்றும் உடனடி நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment