Sunday 12 August 2018

மாணவர்கள் மீது சுடுநீர் கொட்டிய விவகாரம்; விசாரணை நடத்தப்படும்- சிவநேசன்

ரா.தங்கமணி

ஈப்போ-
2ஆம் ஆண்டு பயிலும் மூன்று மாணவர்கள் மீது கேத்தலில் இருந்த சுடுநீர் கொட்டிய சம்பவத்தை மாநில அரசு கடுமையாக கருதுவதாகவும் அது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும்  பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

சித்தியவான், ஸ்ரீ மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளியில் பயிலும் எல்.டர்ஷன், எம்.பவனேஸ்வரன், எம்.ஈஸ்வரன் ஆகிய மூன்று மாணவர்கள் மீதும் கடந்த வியாழக்கிழமை சுடுநீர் கொட்டியது.

இவ்விவகாரம் தொடர்பில் ஒரு மாணவனின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆயினும் மாநில அரசும் இச்சம்பவம் குறித்து விசாரண் நடத்தும்.
விசாரணை முடிவுகள் வரும்வரை யாரும் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று வலியுறுத்திய சிவநேசன், இம்மூவரின் உடல்நிலையும் தேறி வருவதாகவும் 4% - 17% வரை காயம் ஏற்பட்டிருப்பதாகவும் சிவநேசன் கூறனார்.

மேலும் இம்மூன்று மாணவர்களுக்கும் சிறந்த சிகிச்சையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

நேற்று முன்தினம் அறிவியல் பாட நேரத்தின்போது காலை 10.00 மணியிலிருந்து 11.00 மணிக்கு இடைபட்ட நேரத்தில் மின்சார கேத்தலில் இருந்த சுடுநீர் இம்மூன்று மாணவர்கள் மீது கொட்டியது.

உடனடியாக மஞ்சோங் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இம்மூவரும் பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈப்போ மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment