Wednesday 25 April 2018

GE 14: பேரா தேமு வேட்பாளர்கள் அறிவிப்பு


ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்
ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு 24 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 59 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியலை பேரா மாநில தேசிய முன்னணி அறிவித்தது.

இன்று காலை மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளருக்கு இத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

மஇகா வேட்பாளர்கள்

இத்தேர்தலில் மஇகா சார்பில் இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கு மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு டத்தோ எம்.சரவணன், சுங்காய் சட்டமன்றத் தொகுதிக்கு பேரா மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ, புந்தோங் சட்டமன்றத் தொகுதிக்கு பேரா மஇகா மகளிர் பிரிவுத் தலைவி திருமதி தங்கராணி, ஜெலாப்பாங் சட்டமன்றத் தொகுதிக்கு பேரா மஇகா செயலாளர் தங்கராஜு ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.


இரு தொகுதிகளில் டத்தோஶ்ரீ ஸம்ரி

பேராக் மந்திரி டத்தோஶ்ரீ ஸம்ரி இம்முறை இரு தொகுதிகளில் களமிறங்கவுள்ளார். லுமூட் நாடாளுமன்றத் தொகுதியிலும் பங்கோர் சட்டமன்றத் தொகுதியிலும் டத்தோஶ்ரீ ஸம்ரி வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

மீண்டும் டத்தோஶ்ரீ உஸ்னி

தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில்  டத்தோஶ்ரீ உஸ்னியே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது நிதியமைச்சராக பதவி வகித்த டத்தோஶ்ரீ உஸ்னி அனாட்ஸ்லா, பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் 2016இல் மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தின்போது நிதியமைச்சராக நியமிக்கப்படாததை அடுத்து அம்னோ பொருளாளர், பேராக் அம்னோ பொருளாளர், தம்பூன்  தொகுதி அம்னோ தலைவர் போன்ற பதவிகளை ராஜினாமா செய்தார்.

அனைத்து பதவிகளையும் துறந்துள்ள நிலையில் டத்தோஶ்ரீ உஸ்னி மீண்டும் தம்பூன் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவாரா? என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இன்று அவர் மீண்டும் தேமு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அம்னோவுக்கு கைமாறிய ஊத்தான் மெலிந்தாங்

கடந்த காலங்களில் மஇகா போட்டியிட்டு இத்தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என 'நம்பிக்கை' முகம் காட்டிய ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி இம்முறை அம்னோவுக்கு கைமாற்றப்பட்டுள்ள நிலையில் டத்தோ கைருடின் தர்மிஸி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மந்திரி பெசாரிடமிருந்து உறுதி கடிதம் பெற்றுக் கொண்ட துணைப் பிரதமர்
பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதி  வேட்பாளராக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான உறுதிக் கடிதத்தை மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் எடுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment