Sunday, 8 April 2018
22 ஆண்டுகளில் சாதிக்காதது 100 நாட்களில் சாத்தியமாக்கப்படுமா? மகாதீரை சாடினார் நஜிப்
கோலாலம்பூர்-
22 ஆண்டுகளாக பதவி வகித்தபோது தீர்க்கப்படாத பிரச்சினைகளை 100 நாட்களில் தீர்ப்பேன் என கூறபடுவதை நம்புவதற்கு இந்திய சமூகம் எளிதில் ஏமாறக்கூடிய சமூகம் அல்ல என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.
துன் மகாதீர் மீண்டும் பிரதமரானால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வந்து விடும் என இந்திய சமுதாயம் எளிதில் ஏமார்ந்து விடக்கூடாது.
துன் மகாதீர் பிரதமராக பதவி வகித்த 22 ஆண்டுகளில் இந்திய சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியது. ஆனால், இப்போது ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களிலேயே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என கூறுகிறார்.
தேசிய முன்னணி மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை இந்திய சமூகம் நன்கு அறிந்துள்ளனர் என லெம்பா பந்தாயில் உள்ள பி40 பிரிவுக்குட்பட்ட இந்தியர்களுக்கு சிறப்பு முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தபோது பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இவ்வாறு கூறினார்.
இந்திய சமுதாயம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணாமல் இப்போது இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மஇகா மீது பழிபோடுகிறார்.
மற்றவர்களை குறை கூறும் அவர் தன்னுடைய குறைகளை உணர மாட்டார். ஃபோரெக்ஸ் விவகாரத்தில் (பேங்க் நெகாரா மலேசியா) 31 மில்லியன் வெள்ளி நஷ்டமடைந்ததற்கு பிறர் மீது குற்றம் சுமத்துகிறார்.
மெமாலி சம்பவத்தில் ( முன்னாள் துணை பிரதமர்) துன் மூசா ஹீத்தாமை சாடுகிறார். ஓப்ஸ் லாலாங் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர், அதற்கு போலீஸ் படைத் தலைவர் மீது குறை கூறுகிறார்.
இதற்கு மேலாக இந்திய சமுதாயத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மஇகாவை குறை கூறுகிறார் என கூறிய டத்தோஶ்ரீ நஜிப் மஇகாவின் முன்னாள் தலைவர் துன் ச.சாமிவேலுவை தற்காத்து பேசினார்.
நாட்டின் மேம்பாட்டில் இந்திய சமூகம் ஒருபோதும் கைவிடப்படாது என கூறிய டத்தோஶ்ரீ நஜிப், நாட்டின் மேம்பாட்டில் அனைவருக்கும் சமமான வளர்ச்சியை பெற வேண்டும். அந்த வளர்ச்சியில் பெரிய, சிறிய சமூகம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமான முன்னேற்றத்தை பெற்றிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment