Tuesday 10 April 2018
ஒற்றுமையாக இருந்து சுங்கை சிப்புட்டை மீட்டெடுப்போம்- கி.மணிமாறன்
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுப்பதற்கு கட்சியினர் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைகொடுக்க வேண்டும் என சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் கேட்டுக் கொண்டார்.
கடந்த இரு தவணைகளாக சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து கிடக்கிறது. எதிர்க்கட்சியின் வசம் இருப்பதால் சுங்கை சிப்புட் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகள் கிடைக்கப்படாமலே போகிறது.
இதனால் பிற இனத்தவர்களை காட்டிலும் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் நாட வேண்டியுள்ளது.
இப்போது நமக்கு தேவை அரசியல் பலம். எதிர்க்கட்சியிடம் இழந்து விட்ட அரசியல் ஆளுமையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்நோக்கும் பல்வேறு அடிப்படை பிரசினைகளுக்கு தீர்வு காண முடியும் என நேற்று இங்கு சுங்கை குருடா தோட்ட மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடும் நிகழ்வில் உரையாற்றுகையில் மணிமாறன் குறிப்பிட்டார்.
இந்த தேர்தல் கடுமையான ஒன்றாக கருதப்படும் வேளையில் நம்மிடையே ஒற்றுமை மேலோங்க வேண்டியது அவசியமாகும். ஒற்றுமையாக இருந்தால் மட்டும்தான் வெற்றி கொள்ள முடியும்.
இந்நிகழ்வில் இளைஞர்களின் மோட்டார் சைக்களிகளுக்கு எண்ணெய் மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேர்தலில் நாம் இழந்து நிற்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை நிச்சயம் கைப்பற்ற முடியும் என அவர் மேலும் சொன்னார்.
இந்நிகழ்வில் லிந்தாங் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், உதவித் தலைவர் முனைவர் சண்முகவேலு, இளைஞர் பிரிவுத் தலைவர் மு.நேருஜி, மகளிர் பிரிவுத் தலைவி திருமதி விஜயகுமாரி, தைப்பிங் வீரன், சற்குணன், உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment