Friday 27 April 2018

டான்ஶ்ரீ கேவியசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மைபிபிபி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதற்காக அங்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக சேவைகளை மேற்கொண்டிருந்தார் டான்ஶ்ரீ கேவியஸ்.

அத்தொகுதி தனக்கு ஒதுக்கப்படவில்லை என்பதாலும் ஒதுக்கப்பட்ட சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் அதிரடியாக அறிவித்தார் அவர்.

ஆயினும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் தேசிய முன்னணியை மைபிபிபி கட்சி வெளியேறலாம் என்ற எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட டான்ஶ்ரீ கேவியஸ், அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் 'தேசிய முன்னணியுடனான நட்புறவு தொடரும்' என எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆயினும் மைபிபிபி ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள் 'மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்ந்து விலகிக் கொண்டதாக' டான்ஶ்ரீ கேவியஸும், 'அவர் விலகவில்லை; ஒழுங்கு நடவடிக்கை பிரிவின் மூலம் நாங்கள்தான் அவரை நீக்கினோம்' என மைபிபிபி செயலவை உறுப்பினர்களும் அடுத்தடுத்து அறிவித்தனர்.

இந்நிலையில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்காக தனது 25 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ள டான்ஶ்ரீ கேவியஸ், இனி என்ன செய்யப் போகிறார் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

'14ஆவது பொதுத் தேர்தல் வரைக்கும் நான் மெளனம் காப்பேன்' என டான்ஶ்ரீ கேவியஸ் அறிவித்துள்ளது  அவரின் அடுத்த  அரசியல் வியூகத்தை எட்டி பார்க்கச் செய்துள்ளது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போதிலும் தேசிய முன்னணிக்கு ஆதரவாகவே இருப்பேன் என கேவியஸ் கூறியுள்ள போதிலும், அவர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைவாரா? ஆதரவாக களமிறங்குவாரா?, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவாரா? போன்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.

எது எவ்வாறாக இருப்பினும் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் தேசிய முன்னணிக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையிலான மோதலை மட்டுமல்லாது எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் நிறைந்ததாகவும் அமையலாம் என்பதை மறுக்க முடியாது.

No comments:

Post a Comment