Sunday 8 April 2018

கட்சிக்கு விசுவாசமானவர்களையே ஜசெக வேட்பாளராக களமிறக்கும்- டத்தோ ஙா கோர் மிங்


ரா.தங்கமணி

ஈப்போ-
கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களையே ஜனநாயக செயல் கட்சி (ஜசெக)  வேட்பாளராக களமிறக்கும் என பேராக் மாநில ஜசெக தலைவர் டத்தோ ஙா கோர் மிங் கூறினார்.

பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் கட்சி தாவும் நடவடிக்கை வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும். அத்தகைய நடவடிக்கை நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2009 கசப்பான சம்பவம் மீண்டும் நிகழாத வண்ணம் படித்தவர்களையும், அனுபவசாலிகளையும்  வேட்பாளராக களமிறக்க கட்சி தலைமைத்துவம் முனைந்துள்ளது.

வேட்பாளர் விவகாரத்தில் கட்சி தலைமைத்துவம் திறம்பட செயலாற்றி வருகிறது என அவர் சொன்னார்.

கடந்த 2009ஆம் ஆண்டு கட்சி தாவல் நடவடிக்கையினால் மக்கள் கூட்டணி ஆட்சியமைத்திருந்த பேராக் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இது இன்னமும் மக்களிடம் பதிவாகியுள்ள நிலையில் வேட்பாளர் தேர்வு எவ்வாறு இருக்கும்? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

மேலும், ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட நம்பிக்கைக் கூட்டணி முனைந்துள்ள காரணத்தினாலேயே ஜசெகவின்  'ராக்கெட்' சின்னம் 14ஆவது பொதுத் தேர்தலில் கைவிடப்பட்டுள்ளது என பேராக் மாநில ஜசெக தலைவர் டத்தோ ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

'ராக்கெட்' சின்னத்தை விட்டுக் கொடுத்துள்ளது கட்சி உறுப்பினர்களுக்கு வேதனையாக இருந்தாலும் நாட்டை ஆளும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இதுவே சரியான தருணமாகும் என்பதன் அடிப்படையில் இம்முடிவை கூட்டணி கட்சியினர் முன்னெடுத்துள்ளனர்.

நம்பிக்கைக் கூட்டணி தலைமைத்துவம் எடுத்துள்ள இந்த முடிவை கட்சி உறுப்பினர்கள் ஏற்று வரும் பொதுத் தேர்தலில் வெற்றி கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும் என இன்றுக் காலை ஜசெக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

No comments:

Post a Comment