Tuesday 17 April 2018
வேட்பாளர் விவகாரத்தில் மஇகா சித்து விளையாட்டு காட்டுவது ஏன்? லோகநாதன் ஆதங்கம்
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கு தகுதியான வேட்பாளர் களமிறக்குவதில் மஇகா தலைமைத்துவம் சித்து விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பது ஏன்? என சுங்கை சிப்புட் தொகுதி முன்னாள் தலைவர் லோகநாதன் கேள்வி எழுப்பினார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் மஇகா தலைமைத்துவம் வேட்பாளர் விவகாரத்தில் இன்னமும் தீர்க்கமான முடிவு எடுக்கப்படாத சூழலே நிலவுகிறது.
தற்போது சுங்கை சிப்புட் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவி திருமதி தி.தங்கராணி களமிறக்கப்படுகிறார் என அறியப்படுகிறது.
இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த துன் ச.சாமிவேலு முழு அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த பொதுத் தேர்தலின்போது வேட்பாளராக களமிறங்கிய டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி துணை அமைச்சராக பதவி வகித்தவர்.
இத்தகைய பதவி அதிகாரத்தோடு களமிறங்கியவர்களாலேயே வெற்றி பெற முடியாத சூழலில் புதுமுகம், மக்களுக்கு அறிமுகமே இல்லாத ஒருவரை வேட்பாளராக களமிறக்குவது 'விஷ பரீட்சை'யில் இறங்குவதற்கு சமமாகும்.
வேட்பாளர் விவகாரத்தில் தொகுதி மஇகாவினரிடம் கலந்து பேசாமல், கருத்துகளை அறியாமல் யாரோ ஒருவரை வேட்பாளராக களமிறக்கினால் வெற்றி வாய்ப்பை எவ்வாறு உறுதி செய்வது என கேள்வி எழுப்பிய கம்போங் முஹிபா கிளைத் தலைவருமான லோகநாதன், திருமதி தங்கராணி தான் சுங்கை சிப்புட் தேமு வேட்பாளர் என்றால் அவரை எதிர்த்து போட்டியிட தான் தயார் என நேற்று இங்கு நடைபெற்ற சித்திரை புத்தாண்டு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment