Tuesday 17 April 2018

14ஆவது பொதுத் தேர்தல் கண்ணோட்டம்; மஇகா வேட்பாளர்கள் இவர்களா?


ரா. தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் மேம 9ஆம் தேதி நடைபெறும் நிலையில்
வேட்புமனுத் தாக்கல் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் மஇகா சார்பில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் இவர்கள் தான் என ஆருடக் கண்ணோட்டம் கசிந்துள்ளது.

* டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம்

- மஇகாவின் தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தனது சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியிலேயே போட்டியிடவுள்ளார்.

* டத்தோஶ்ரீ எம்.சரவணன்

-  இளைஞர் விளையாட்டு துணை அமைச்சரான டத்தோஶ்ரீ எம்.சரவணன்  தனது தாப்பா தொகுதியிலேயே மீண்டும் வேட்பாளராக களமிறங்கக்கூடும். தாப்பா மக்களிடையே நன்மதிப்பையும் தொகுதி அம்னோவின் முழுமையான ஆதரவையும் பெற்றவரான இவர், இத்தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற்றப்படக்கூடும் என்பது பொய்யாக்கப்பட்டுள்ளது.

* டத்தோ ப.கமலநாதன்
- உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதனே மீண்டும் போட்டியிடவுள்ளார்.  அத்தொகுதியில் வேட்பாளராக அவர் களமிறக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

* கேமரன் மலை
-  மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் நாடாளுமன்ற உறுப்பினராக திகழும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக தற்போது சேவையாற்றி வரும்  டத்தோ சிவராஜுக்கே வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

* சுங்கை சிப்புட்
- பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் கூட்டியுள்ள சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா மகளிர் பிரிவு துணைத் தலைவி  திருமதி தி.தங்கராணி போட்டியிடவுள்ளார் என நம்பப்படுகிறது.
நாளுக்கு நாள் அவரா, இவரா?  என வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில் ஆக கடைசியாக திருமதி தங்கராணியின் பெயர் கூறப்படுகிறது.

* கோத்தா ராஜா
- சிலாங்கூர், கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் கஜேந்திரன் போட்டியிடவுள்ளார். தாமான் செந்தோசாவில் பிறந்த கஜேந்திரன் அத்தொகுதியின் மண்ணின் மைந்தன் என்பதால் இவ்வாய்ப்பு வழங்கப்படுகிறது.

* காப்பார், சிலாங்கூர்
- காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி 'வேட்பாளராக' களமிறக்கப்பட்டவுள்ளார். தற்போது அங்கு களமிறங்கி மக்கள் சேவையை முன்னெடுத்துள்ள அவருக்கு வாய்ப்பு பிரகாசமகவே உள்ளது.

* சுங்கை பூலோ (சுபாங்)
- தொகுதி எல்லை மறுசீரமைப்பில்  'சுங்கை பூலோ' என மாற்றம் கண்டுள்ள சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ ஜஸ்பால் சிங் வேட்பாளராக களமிறக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. அதோடு மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ அ.பிரகாஷ் ராவும்  அத்தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும் அவருக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும் நம்பப்படுகிறது.

* ஜெலுபு
- தொகுதி எல்லை மறுசீரமைப்பில் 'போர்டிக்சன்' என பெயர்  மாற்றம் கண்டுள்ள 'தெலுக் கெமாங்' தொகுதிக்கு பதிலாக 'ஜெலுபு' நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுதியின் வேட்பாளராக மஇகா பிரச்சார பகுதித் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் நிறுத்தப்படவுள்ளார்.

சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நாளை காண்போம்.

No comments:

Post a Comment