Friday 27 October 2017

'மலேசியர்களுக்கே மலேசியா' இன பாகுபாடு ஒருபோதும் தலைதூக்காது- லிம் கிட் சியாங் உறுதி

ரா.தங்கமணி

பெட்டாலிங் ஜெயா-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) புத்ராஜெயாவை கைப்பற்றினால் 'மலேசியர்களுக்கே மலேசியா' என்பது உறுதிப்படுத்தப்படும் என ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் சூளுரைத்தார்.

'மலேசியர்களுக்கே மலேசியா' என்ற ரீதியில் இனம், மதம் ஆகியவற்றை கடந்து ஒரு சமத்துவமான நல்லாட்சியை பக்காத்தான் ஹராப்பான் வழங்கும். இன ரீதியிலான பாகுபாடுகள் இங்கு ஒருபோதும் தலைதூக்கப்படாது.

புத்ராஜெயாவை கைப்பற்றி பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைத்தால் இன ரீதியிலான பதவிகள் வழங்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்படும். மாறாக தகுதியாவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும்.

நேற்று மலேசிய தமிழ் ஊடகத்துடனான விருந்தோம்பல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்தார் எத்தனை இந்தியர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து கருத்துரைத்த கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங், இந்தியர்களுக்கு இத்தனை அமைச்சர்கள், மலாய்க்காரர்களுக்கு இத்தனை அமைச்சர்கள், சீனர்களுக்கு இத்தனை அமைச்சர்கள்  என இன ரீதியிலான ஒதுக்கீடுகள் இங்கு முற்றிலும் நிராகரிப்படும்.

மக்களுக்கான ஒரு சிறந்த ஆட்சியை வழங்க விரும்பும் பக்காத்தான் ஹராப்பான், இன ரீதியில் பிளவுபடுவதை விரும்பவில்லை. மாறாக அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஒரு சிறந்த ஆட்சியை மக்களுக்கு வழங்க பக்காத்தான் ஹராப்பான் விரும்புகிறது. பக்காத்தான் ஹராப்பானின் ஆட்சியில் எந்தவொரு இனமும் புறக்கணிக்கப்படாது என லிம் கிட் கியாங் உறுதியாக கூறினார்.

இந்த ஊடக விருந்தோம்பல் நிகழ்வில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன், பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு,  சபாய் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி, செனவாங் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன்,  கஹாங் சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன், நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் உட்பட தமிழ் ஊடக தலைமையாசிரியர்கள், நிருபர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment