Wednesday 4 October 2017

பொதுமக்களின் பெருமளவு ஆதரவுடன் சாத்தியமானது 'ஒரு மாணவர் ஓர் அகராதி'

ரா.தங்கமணி

ஈப்போ-
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 'அகராதி' வழங்க வேண்டும் என பேராக் மாநில இந்து இளைஞர் பேரவை முன்னெடுத்த  முயற்சி பொதுமக்களின் பெருமளவு ஆதரவுடன் சாத்தியமாகியுள்ளது.

அதிகமான தமிழ்ப்பள்ளிகளை உள்ளடக்கியுள்ள பேராக் மாநிலத்தில் 3,000 மாணவர்களுக்கு 'அகராதி' வழங்க வேண்டும் என முன்னெடுக்கப்பட்ட முயற்சி பொதுமக்களின் வற்றாத ஆதரவுடன் நிஜமாகியுள்ளது என அதன் தலைவர் எஸ்.ஆனந்தன் தெரிவித்தார்.
ஆரம்பப்பள்ளியில் பயில்கின்ற மாணவர்கள், பாடப்புத்தகங்களில் எழும் சந்தேகங்களுக்கு தீர்வு காண்பதற்கு 'அகராதி' அவசியமாகிறது. ஆனால் பல மாணவர்களிடையே 'அகராதி 'நூல் காணப்படுவதில்லை.

இந்த குறையை போக்கும் விதமாகவே பேராக் மாநில இந்து இளைஞர் பேரவை இத்திட்டத்தை முன்னெடுத்தது. மாணவர்களின் கல்வி பணிக்கு தலைவர்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டுக் கேட்டோம்; ஆனால் பொது மக்களின் ஆதரவு பிரமிப்பூட்டும் வகையில் அமைந்திருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதேவேளை கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கலமநாதன் உட்பட இன்னும் பலரும் தங்களது பங்கை வழங்கியுள்ளார்.
மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை செலுத்தும் அதேவேளையில் அவர்களுக்கு பயனுள்ள, ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுப்பத்தில் முனைப்பு காட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த திட்டத்தை 60 தமிழ்ப்பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்துகின்ற நிலையில் தற்போது 30 பள்ளிகளில் இலக்கை எட்டியுள்ளோம் என ஆனந்தன் குறிப்பிட்டார்.
புந்தோங், அரசினர் தமிழ்பள்ளியில் நடைபெற்ற 'ஒரு மாணவர் ஓர் அகராதி' நிகழ்வை டத்தோ ப.கமலநாதன்  அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில், 'அகராதி' மாணவர்களுக்கு மட்டுமின்றி இன்று பல பெரு நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்களுக்கும் அவசியமாக உள்ளது.

ஒரு வார்த்தையில் எழும் சந்தேகத்தை தீர்ப்பதற்கு 'அகராதி' மட்டுமே துணை புரியும். ஆதலால் மாணவர்கள் கல்வி எழும் சந்தேகங்களுக்கு 'அகராதியை' புரட்டுவதில் மட்டுமே தீர்வு காண முடியும்.
ஆகையால், இத்தகைய அரிய முயற்சியை மேற்கொண்ட பேராக் இந்து இளைஞர் பேரவையை வெகுவாக பாராட்டுவதாக டத்தோ கமலநாதன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பேராக் சட்டமன்ற சபாநாயகர் எஸ்.தங்கேஸ்வரி, மலேசிய இந்து இளைஞர் பேரவையின் துணைத் தலைவர் அ.ஜெயராமன், அரசினர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஆர்.முனுசாமி, பேராக் மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவர் சி.சிவராஜ், பேராக் புத்ரா பிரிவு துணைத் தலைவர் ஜி.நெடுஞ்செழியன் உட்பட பேராக் மாநில இந்து இளைஞர் பேரவை பகுதியினர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment