Wednesday 4 October 2017

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்தூக்கி இல்லாத வீடுகளா? மாநகர் மன்றம் பரிசீலனை செய்ய வேண்டும்

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஜாலான் சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் இடமாற்று விவகாரம் மாநில அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்; அதே வேளையில் ஈப்போ மாநகர் மன்றம் அவர்களுக்கு வீடுகளை ஒதுக்குவதில் மிக கவனமுடன் பரிசீலிக்க வேண்டும் என பேராக் மாநில மஇகா மகளிர் தலைவி தங்கராணி தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.

ஜாலான் சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண முற்படும் அதே வேளையில் அவர்களுக்கு எளிய நடைமுறைகளை அமல்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
இங்குள்ள மக்கள் புதிய இடங்களுக்கு மாற்றலாகி செல்லும் நிலையில் அங்கு எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் சவால்களையும் தன்னிடம் முறையிட்டனர் என இங்குள்ள மக்களுக்கு உதவிப் பொட்டலங்கள் வழங்கும்போது குறைகளை கேட்டறிந்த திருமதி தங்கராணி இவ்வாறு கூறினார்.

இங்குள்ள குடியிருப்புப் பகுதியில்  வயதானவர்களும் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களும்  அரசு வழங்கியுள்ள தாமான் ஹார்மோனி அடுக்குமாடி குடியிருப்பு நான்கு மாடிகளைக் கொண்டதாகவும் மின்தூக்கி  இல்லாத காரணத்தாலும் அங்கு குடியேறுபவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

குறிப்பாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட சிலருக்கு நான்காவது மாடியில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் படியில் ஏறி, இறங்க கஷ்டங்களை எதிர்கொள்ளலாம்.
அதற்கு பதிலாக கிந்தா  ஹைட்ஸ் குடியிருப்பு பகுதியில் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தால்  மாநகர் மன்றத்தினர் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக மக்கள் புகார் அளிக்கின்றனர்   என அவர் சொன்னார்.

கிந்தா ஹைட்ஸ் குடியிருப்புப் பகுதியில்  மின்தூக்கி  உள்ளதால்  உடல் நலம் குறைந்தவர்களுக்கும் வயதானவர்களுக்கும்   அங்கு வசிப்பதில் சிரமம் இருக்காது என கூறுகின்றனர்.

எனவே, கிந்தா ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உரிய ஏற்பாடு செய்து கொடுப்பதில் மாநகர் மன்றத்தினருடன் கலந்தாலோசிக்கப்படும் என  மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவியுமான தங்கராணி தெரிவித்தார்.

No comments:

Post a Comment