Thursday 12 October 2017

பேராக்கில் 'ஜனநாயக மோசடி'?; 165,000 ஆவி வாக்காளர்கள் - பேராக் பக்காத்தான் சாடல்

ரா.தங்கமணி

ஈப்போ-
பேராக் மாநிலத்தில்165,000 ஆவி வாக்காளர்ர்கள் உள்ளதால் விரைவில் நடைபெறவுள்ள 14ஆவது பொதுத் தேர்தலில் 'ஜனநாயக மோசடி' நிகழ்த்தப்படலாம் என பேராக் பக்காத்தான் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ள சில கட்சித் தலைவர்கள் மேற்கொள்ளும் நேர்மையற்ற நடவடிக்கைகளால் பேராக் மாநிலத்தில் மட்டும்  165,000 பேர்  'ஆவி வாக்காளர்களாக' பதிவு செய்யப்பட்டுள்ளனர் என பேராக் ஜசெக தலைவர் ஙா கோர் மிங் கூறினார்.

தேர்தல் ஆணைய அகப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள சில வாக்காளர்களின் பட்டியல் நம்பகத்தன்மைக்கு புறம்பாக இருப்பதால் மேற்கொண்ட சில ஆய்வுகளின் வழி இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின்  வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண் தவிர்த்து வீட்டின் முகவரி முழுமை பெறாமல் உள்ளது. இன்னும் சில பட்டியலில் வீட்டு முகவரியே இல்லை.

இத்தகைய நேர்மையற்ற இந்த நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக செயல்படுகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், நாட்டின் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டிய பொதுத் தேர்தல் இதுபோன்ற நடவடிக்கைகளினால் மோசடி தேர்தலாகவே இது கருதப்படுகிறது என்று பேராக் ஜசெக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், உண்மைக்கு புறம்பான முறையில் ஆவி வாக்காளர்களின் துணையுடன் மேற்கொள்ளப்படவுள்ள பொதுத் தேர்தல் நிச்சயம் 'ஜனநாயக மோசடியாகவே' கருதப்படும் என பேராக் பக்காத்தான் ஹராப்பானின்   தேர்தல் இயக்குனர் டத்தோஶ்ரீ நிஸார் ஜமாலுடின் குறிப்பிட்டார்.

நாட்டின் பொதுத் தேர்தல்  சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்பதையே பக்காத்தான் கூட்டணி வலியுறுத்துகிறது. ஆனால் இதில் நாங்கள் அனுதாபம் தேடி கொள்கிறோம் என துணை அமைச்சர் ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்.
பேராக் மாநிலத்தில் மட்டும் 165,000 ஆவி வாக்காளர்கள் என்பது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகும். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பேராக் பக்காத்தான் ஹராப்பான் தயாராகிக் கொண்டிருக்கிறது என டத்தோஶ்ரீ நிஸார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment