Friday 13 October 2017

தீயில் அழிந்த வீடு புதுப்பிக்கப்பட்டது; திருமதி கமலத்திற்கு டிஎன்பி-இன் 'தீபாவளி பரிசு'

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
மின்சார கோளாறினால் ஏற்பட்ட தீயில் முற்றாக அழிந்த வீட்டை புதுப்பித்துக் கொடுத்து தனித்து வாழும் தாயான திருமதி தோ.கமலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது தேசிய மின்சார வாரியம் (டிஎன்பி).

டோவன்பி, கம்போங் ராமசாமியைச் சேர்ந்த திருமதி கமலம் இங்குள்ள ரப்பர் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளியாவார். கடந்த மார்ச் மாதம் தனது மகள் வீட்டிற்குச் சென்றிருந்த வேளையில் வீட்டை சூழ்ந்த தீயால் கடுமையாக சேதமடைந்தது.
குடியிருந்த வீட்டை இழந்து துன்பத்தில் மூழ்கியிருந்த திருமதி கமலத்திற்கு உதவிக்கரம் நீட்டிய கம்போங் ராமசாமி மஇகா கிளைத் தலைவர் பாலகிருஷ்ணன், தொகுதி மஇகா தலைவர் எம்.இளங்கோவன் ஆகியோர் தேசிய மின்சார வாரியத்தின் (டிஎன்பி) கவனத்திற்குக் கொண்டுச் சென்றனர்.

டிஎன்பி-இன் சமூக கடப்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த வீட்டுக்கு உதவ முன்வந்த டிஎன்பி, முதற்கட்டமாக 30,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்தது. ஆனால் அந்த நிதி மறுசீரமைப்புக்கு பற்றாக்குறையாக இருந்ததால் கூடுதலாக 20,000 வெள்ளி ஒதுக்கப்பட்டது என டிஎன்பி வாரிய இயக்குனர் டத்தோ அ.சக்திவேல் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற இந்த வீட்டின் சாவியை ஒப்படைக்கும் நிகழ்வில் மேலும் பேசிய அவர், டிஎன்பி வாரியம் இந்த வீட்டை பல வீடுகளை புதுப்பித்துள்ளது. பேராக் மாநிலத்தில் சுங்கை சிப்புட், ஊத்தான் மெலிந்தாங் ஆகிய பகுதிகளில் இரு வீடுகளை மறுசீரமைப்பு செய்துள்ளது என மஇகா பொதுச் செயலாளருமான டத்தோ சக்திவேல் கூறினார்.

அதோடு, இந்நிகழ்வில் பேசிய பேராக் டிஎன்பி வாரிய தலைமை நிர்வாகி ராஜா அப்துல் ஜாலில் பின் ராஜா ஸைட் கூறுகையில், சமூக கடப்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டம் இன்று திருமதி கமலாவின் கண்ணீரை துடைத்துள்ளது.
ஒரு மாத காலத்திற்குள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த வீட்டின் குடியேறும் திருமதி கமலாவின் ஆனந்தமே என்பது முக்கியம் என்பதால் கூடுதலான செலவீனத்தையும் பொருட்படுத்தாமல் இந்த வீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதனிடையே, இந்நிகழ்வில் பேசிய திருமதி கமலா, தீயில் வீட்டை பறிகொடுத்து பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தேன். என் கண்ணீரை துடைக்கும் வகையில் டிஎன்பி, மஇகா கைகொடுத்துள்ளது. தீயில் முற்றாக சேதமடைந்த எனது வீட்டை மீண்டும் புதுப்பித்துள்ள டிஎன்பி வாரியத்திற்கும் மஇகாவுக்கும்  நன்றி கூறிக் கொள்வதாக ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினார் திருமதி கமலா.
இந்நிகழ்வில் டிஎன்பி பொறியியலாளர் செல்வராஜு, சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர் கி.மணிமாறன், உதவித் தலைவர் டாக்டர் சண்முகவேலு, திருமதி கமலாவின் குடும்பத்தினர், பொதுமக்கள் ஆகியோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment