Friday 6 October 2017

தீபாவளி பெருநாளில் தொடரும் அவலம்; இந்திய மாணவர்களை வஞ்சிப்பது ஏன்?- வீ.சிவகுமார்

ரா.தங்கமணி

ஈப்போ-
மலேசிய இந்தியர்களின் பெருநாள் விழா கொண்டாட்டமான  தீபாவளி பெருநாளின்போது இந்திய மாணவர்களை வஞ்சிக்கும் கல்வி அமைச்சு, இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் போக்கை வன்மையாக கண்டித்தார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார்.

இவ்வாண்டு தீபாவளி வரும் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஒருநாள் மட்டுமே பொது விடுமுறை வழங்கப்படுவதால் பெரும்பாலான இந்துக்கள் இந்த தீபாவளி தினத்தை பெரும் இன்னலுக்கு மத்தியில் கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருநாள் மட்டும் பொது விடுமுறை என்பதால் தங்களது குடும்பத்தினருடன் குதூகலமாக கொண்டாடுவதற்கு பலருக்கு வாய்ப்பில்லாமல் போகலாம். அதோடு உயர்கல்வி பயில்கின்ற இந்திய மாணவர்கள் ஒருநாளில் மட்டும் குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கக்கூடிய நிர்பந்தம் நிலவுகிறது.

ஒரு சில உயர்கல்வி, பல்கலைக்கழகங்கள் தீபாவளி பெருநாளுக்கு ஒருநாள் மட்டுமே பொது விடுமுறை வழங்குவதால் அங்கு பயில்கின்ற இந்திய மாணவர்கள் மறுநாள் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

அதோடு, இவ்வாண்டு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை வழங்கப்படுகின்றது. 13ஆம் தேதி தொடக்கம் 20ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை அனுசரிக்கப்படும் என முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்போது  வரும் 14ஆம் தேதி  தேசிய விளையாட்டு தின நிகழ்ச்சிகள் அனைத்து பள்ளிகளில் கொண்டாடப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கை மாணவர்கள், பெற்றோர்களில் தீபாவளிம் குதூகலத்திற்கு இடையூறாக அமையலாம் என குறிப்பிட்ட சிவகுமார், தீபாவளி பெருநாள் காலங்களில் மட்டும் பிற நிகழ்ச்சிகள் திணிக்கப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

பிற சமயத்தினரின் பெருநாள் காலங்களின்போது பிற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது இல்லை; விடுமுறை நாட்களும் தாராளமாக வழங்கப்படும். ஆனால் இந்தியர்களின் பெருநாட்களில் மட்டும் இந்த அவலநிலை ஏன் ஏற்படுகிறது?

கல்வி அமைச்சிலும், இளைஞர், விளையாட்டு துறை  அமைச்சிலும் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதியாக இரு துணை அமைச்சர்கள் இருக்கும்போது ஏன் இந்த நிலை?

இந்தியர்களை வஞ்சிக்கும் ஆளும் அரசாங்கத்தின் போக்கு இந்தியர்களிடையே வெறுப்புணர்வை தூண்டுகிறது என குறிப்பிட்ட பேராக் மாநில பக்காத்தான் ஹராப்பானின் செயலாளருமான சிவகுமார், தீபாவளி பெருநாளை கூட இந்தியர்கள் சந்தோஷமாக அனுபவிக்க முடியாத அவலம் தொடர்கதையாவது வேதனைக்குரியதாகும் என இங்கு பேராக் ஜசெக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

No comments:

Post a Comment