Thursday 26 October 2017

சமூகநல உதவிக்கான விதிமுறையில் மாற்றம் வேண்டும்- மணிமாறன் வலியுறுத்து

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்  (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சமூகநல உதவியை பெறுவதற்கான நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட  வேண்டும் என சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன்  வலியுறுத்தினார்.

தற்போது சமூகநல உதவியை பெறுவதற்கு குடும்ப வருமானம்  700 வெள்ளி என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில குடும்பங்களில் வருமானம் 1000 வெள்ளிக்கு மேல் இருப்பதால் சமூகநல உதவியை பெற விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இன்றைய சூழலில் வாழ்க்கைச் செலவீனங்கள் அதிகரித்துள்ளன. அன்றாட வீட்டுச் செலவீனம், பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு கட்டணம், போக்குவரத்து செலவு என சம்பாதிக்கும் வருமானம் அனைத்திற்கும் செலவிடப்படுகின்றது.

இந்நிலையில் மருத்துவ செலவை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு செலவிட பல குடும்பங்கள் பெரும் இக்கட்டான நிலையை எதிர்நோக்கியுள்ளன. மருத்துவ உபகரணங்களையும் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட பலர் தடுமாறுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு நோய்வாய்பட்டுள்ள, பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளவர்கள் சமூகநல உதவியை பெறும் வகையில் அதன் சட்டத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதற்கு 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வழிவகுக்க வேண்டும்.

தற்போதுள்ள் 700 வெள்ளி விதிமுறையை மாற்றி 1,200 வெள்ளியாக நிர்ணயம் செய்தால் பலருக்கு சமூகநல உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என  மணிமாறன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment