Tuesday 24 July 2018

பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினைகளை களைய 'தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு ஒருங்கிணைப்புக் குழு' அமைந்தது


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து ஆராய தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் நிலம், கட்டடம், அடிப்படை வசதியின்மை, மாணவர் எண்ணிக்கை சரிவு, கற்றல், கற்பித்தல் நடவடிக்கை போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய இக்குழு களப்பணியாற்றும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகள் மட்டுமல்லாது இடைநிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கல்வி பிரச்சினைகளையும் இக்குழு கவனத்தில் கொள்ளும் என குறிப்பிட்ட அவர், மாணவர்களை எதிர்காலத்தில்  சிறந்தவர்களாக உருவாக்க இத்தகைய நடவடிக்கை அவசியமானது என்றார்.

மேலும், இந்த குழுவுக்கு கூடிய விரைவில் மாநில ஆட்சிக்குழுவின் அங்கீகாரம் கிடைப்பதற்கான வழிவகைகள் காணப்படும் என அவர் சொன்னார்.

சிவநேசனை ஆலோசகராகக் கொண்டு அமைந்துள்ள இக்குழுவின் தலைவராக க.குணசேகரன், துணைத் தலைவராக உ.முத்துசாமி, செயலாளராக பூபாலன், ஆரம்பப்பள்ளி விவகாரங்களுக்கு பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன், இடைநிலைப்பள்ளி விவகாரங்களுக்கு பேரா மாநில கல்வி இலாகா துணை இயக்குனர் (தமிழ்மொழி) சந்திரசேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment