Monday 16 July 2018

புந்தோங், மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் திடல் இல்லா பிரச்சினை; சட்டமன்றத்தில் குரல் எழுப்புவேன் - சிவசுப்பிரமணியம்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு திடல் இல்லா பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் புந்தோங் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

தற்போது இப்பள்ளிக்கு அருகில் உள்ள ஐஆர்சி கிளப்பின் எதிர்ப்புறம் உள்ள திடல் இன்னமும் மாநகர் மன்றத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது.

அதனை இப்பள்ளிக்கூட மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வரும் வகையில் ஈப்போ மாநகர் மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவ்விவகாரத்தை வரும் சட்டமன்றக் கூட்டத்தில் பேசவிருப்பதாகவும்  பள்ளியின் 52ஆவது திடல் தட போட்டியில் கலந்து கொண்டபோது சிவசுப்பிரமணியம் கூறினார்.

மேலும் இப்பள்ளியில் பல வகுப்பறைகள் காலியாக உள்ளது கவலையளிப்பதாகவும் தற்போது 101 மாணவர்கள் மட்டுமே பயிலும் இப்பள்ளியில் இன்னும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

புந்தோங் வட்டாரத்தில் அதிகமான இந்தியர்கள் உள்ள நிலையில் இங்குள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு தங்களது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் சேர்க்க  பெற்றோரும் அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது பள்ளி தலைமையாசிரியர் திருமதி பைரவி கூறுகையில், பள்ளிக்கு பல்வேறு வகையில் உதவிக்கரம் நீட்டி வரும் அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி கூறி கொண்டார்.

No comments:

Post a Comment