Tuesday 10 July 2018

தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களாலே தொழில் சங்கங்கள் அமைப்பதற்கான பின்னடைவு- சிவநேசன்


ரா.தங்கமணி

ஈப்போ-
அமலில் உள்ள சட்டங்கள் தொழிலாளர் நலனுக்கு எதிராகவே இருப்பதால் தொழிலாளர் சங்கங்கள் அமைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது என பேரா மாநில மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

இன்று நாட்டிலுள்ள பல தேசிய தொழில் சங்கங்கள் நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், தேசிய தொழில் சங்க அமைப்பு, தேசிய டெலிகோம் பணியாளர் சங்கம், தேசிய குமாஸ்தா சங்கம், தேசிய ஆசிரியர் சங்கம் ஆகியவை அமைக்கப்பட்டன.

சுதந்திரத்திற்கு பின்னர் 'அலையன்ஸ்' ஆட்சி, பின்னர் தேசிய முன்னணி ஆட்சியின்போது தேசிய தொழில் சங்கங்கள் அமைப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

தொழில் சங்கங்கள் அமைப்பதற்கு பதிலாக நிறுவனத்திற்குள்ளாகவே தொழில் சங்கங்கள் அமைக்கப்பட்டன. நிறுவன நிர்வாகத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொழிலாளர்களைக் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டன.

தேசிய தொழில் சங்கங்கள் அமைத்தால் அது தொழிலாளர் பலத்தை வலுவாக்கும் என்ற நிலையில் தேசியமுன்னணி அரசாங்கம் அதை அமலாக்கம் செய்ய விடவில்லை.

50 ஆண்டுகளுக்கு பின்னர் 2014ஆம் ஆண்டு மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம், பகுதி வாரியாக (Regional) தொழில் சங்கங்கள் அமைக்க அனுமதித்தார்.

ஆனால் நாட்டிலுள்ள நிறுவனங்களில் தொழில் சங்கங்கள் அமைக்க அங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் 51 விழுக்காட்டினரின் ஆதரவை பெற்றால் மட்டுமே தொழில் சங்க அமைக்க முடியும் என சட்டம் சொல்கிறது.

இன்றைய சூழலில் பல தொழில் நிறுவனங்களில் அந்நிய தொழிலாளர்களே அதிகமாக பணியாற்றுகின்றனர். உதாரணத்திற்கு 200 உள்நாட்டவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் 300 வெளிநாட்டவர்கள் வேலை செய்வதால் தொழில் சங்கம் அமைப்பதற்கான ஆதரவை பெற முடியாத சூழல் உள்ளது.

பெரும்பாலும் அந்நியத் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிய வரும்போது தொழில் சங்கங்களில் உறுப்பினராக சேரக்கூடாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலையில் சேர்கின்றனர். ஆனால் தொழிலாளர் சட்டத்தில் அந்நிய நாட்டவர்கள் அங்கத்தினராக சேர முடியாது என கூறப்படவில்லை.

நாட்டிலுள்ள 14 மில்லியம் தொழிலாளர்களில் 1.4 மில்லியன் தொழிலாளர்களே தொழில் சங்கங்களில் உறுப்பினராக உள்ளது. எஞ்சிய 85 விழுக்காட்டினர் தொழில் சங்கங்களில் உறுப்பினராக இணையாமல் உள்ளனர்.

ஆகவே,  தொழில் சங்கங்கள் அமைக்கப்படாமல் தொழிலாளர்கள் நலன் புறக்கணிக்கப்படும் வகையிலே கடந்த கால ஆட்சி அமைந்திருந்தது என சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் தொழில் சங்கங்கள் அமைக்க நடப்பு அரசாங்கம் முனைய வேண்டும் என பிஎஸ்எம் கட்சி முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது தொழிலாளர் வழக்கறிஞருமான் சிவநேசன் இவ்வாறு தெர்வித்தார்.

No comments:

Post a Comment